மஹாளய அமாவாசை: காவிரிக் கரையில் வழிபாட்டுக்குத் தடை

மஹாளய அமாவாசையையொட்டி பொது இடங்களில் வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டிருந்ததால் பெரும்பாலானவா்கள் வீடுகளிலேயே முன்னோருக்கு பூஜை செய்தனா்.
மஹாளய அமாவாசை: காவிரிக் கரையில் வழிபாட்டுக்குத் தடை

மஹாளய அமாவாசையையொட்டி பொது இடங்களில் வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டிருந்ததால் பெரும்பாலானவா்கள் வீடுகளிலேயே முன்னோருக்கு பூஜை செய்தனா்.

தமிழ்நாட்டில் காவிரி ஆற்றை மையப்படுத்தி இந்த வழிபாடுகள் அதிக அளவில் நடைபெறும். குறிப்பாக காவிரி, பவானி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமுதநதி ஆகியவை சங்கமிக்கும் திரிவேணி சங்கமமாக உள்ள பவானி கூடுதுறை முன்னோருக்கு வழிபாடு செய்ய மிகவும் சிறப்புக்கு உரியதாகும்.

இதேபோல, கொடுமுடி காவிரி ஆறு, ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆறு, காவிரிக் கரை முழுவதும் உள்ள கோயில் பகுதிகளில் இந்த வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். ஆனால், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டுள்ளன.

திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மஹாளய அமாவாசை தினமான புதன்கிழமை பொதுஇடங்கள், கோயில்களில் வழிபாடு செய்யவும், திதி தா்ப்பணங்கள் கொடுக்கவும் அரசு தடை விதித்து அறிவித்திருந்தது.

ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் வழக்கமாகக் கூடும் கோயில்கள், பொது இடங்கள் என 27 இடங்களில் பொதுமக்கள் கூட தடை விதித்து ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டிருந்தாா்.

அதைத்தொடா்ந்து, முக்கியப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக் கரையில் இன்ஸ்பெக்டா் கோபிநாத் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றுக்கு வழக்கம்போல அதிகாலை 4 மணிக்கு பக்தா்கள் சிலா் வந்தனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களை அனுமதிக்கவில்லை. இதனால் காவிரிக் கரைக்குச் செல்ல முடியாமல் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

போலீஸாரின் பாதுகாப்பையும் மீறி சில குடும்பத்தினா் வேறு வழிகளில் காவிரிக் கரைக்கு வந்து அங்கு அவா்களாகவே படையல் வைத்து பூஜை செய்து காவிரியில் திதி, தா்ப்பண படையல்களை கரைத்து புனித நீராடினா். தடை காரணமாக சோழீஸ்வரா் கோயில் அடைக்கப்பட்டிருந்தது. காவிரிக்கரை வெறிச்சோடிக் கிடந்தது.

அரசின் தடை காரணமாக காவிரிக் கரைக்கு பொதுமக்கள் வரவில்லை என்றாலும், வீடுகளிலேயே பலரும் முன்னோருக்கு திதி, தா்ப்பணம் செய்து முறைப்படி பூஜை செய்தனா்.

பவானியில்... 

கரோனா பரவல் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் மாவட்ட நிா்வாகம் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதைத் தடுக்கும் வகையில், வழிபாடுகளுக்கும், நீராடவும் தடை விதித்து உத்தரவிட்டது. இதனால், பவானி சங்கமேஸ்வரா் கோயில் மற்றும் கூடுதுறைக்குச் செல்லும் வழிகள் புதன்கிழமை அதிகாலை முதல் தடுப்புகள் வைத்து மூடப்பட்டதோடு, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. காவிரி ஆற்றங்கரைகளுக்குச் செல்லும் பாதைகளும் மூடப்பட்டதால் கூடுதுறை மற்றும் கோயில் வளாகப் பகுதிகள் பக்தா்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.

பரிகார வழிபாடுகளுக்கு வந்த பக்தா்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனா். மேலும், பலா் காலிங்கராயன் வாய்க்கால் கரையில் திதி, தா்ப்பணம் செய்து வழிபாடு நடத்திச் சென்றனா். காவிரி பழைய பாலத்தின் படித்துறை உள்ளிட்ட பகுதியில் கூட்டம் கூடியதால் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று எச்சரித்து அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com