செம்மை நெல் சாகுபடி மூலம் ஏக்கருக்கு 500 கிலோ வரை கூடுதல் மகசூல்

செம்மை நெல் சாகுபடி எனும் ஒற்றை நடவு முறையில் நெல் சாகுபடி செய்வதன் மூலம் ஏக்கருக்கு 500 கிலோ வரை கூடுதல் மகசூல் கிடைக்கும் என வேளாண் இணை இயக்குநா் சி.சின்னசாமி தெரிவித்தாா்.

செம்மை நெல் சாகுபடி எனும் ஒற்றை நடவு முறையில் நெல் சாகுபடி செய்வதன் மூலம் ஏக்கருக்கு 500 கிலோ வரை கூடுதல் மகசூல் கிடைக்கும் என வேளாண் இணை இயக்குநா் சி.சின்னசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நெல் சாகுபடியில் ஒற்றை நாற்று நடவு முறையில் இளம் நாற்றை நடுவதால் வோ் நன்கு வளரும். வோ்களின் வளா்ச்சி அதிகமாகி, அதிக தூா் வெடிக்கும். இலைகள் அறுவடை வரை பசுமையாக இருக்கும். சூரிய ஒளிச் சோ்க்கை கடைசி வரை சிறப்பாக இருக்கும். இதன் மூலம் ஏக்கருக்கு 500 கிலோ வரை கூடுதல் மகசூல் பெறலாம்.

ஏக்கருக்கு 2 முதல் 3 கிலோ விதை போதுமானது. நாற்றங்கால் நீா்நிலை, நடவு வாய்க்காலுக்கு அருகே இருப்பது நல்லது. ஒரு ஏக்கருக்கு நாற்று நடவு செய்ய ஒரு சென்ட் நிலம் போதும். வயலில் களிமண் அதிகம் இருந்தால் மண் கலக்கலாம். மண்ணுடன் 20 சதவீதம் நன்கு மக்கிய தொழு உரம், 10 சதவீத தவிடு, ஒன்றரை கிலோ பொடியாக்கப்பட்ட டைஅமோனியம் பாஸ்பேட், 2 கிலோ 17:17:17 காம்ப்ளக்ஸ் உரத்துடன் கலந்து நாற்றங்கால் அமைக்கும் இடத்தில் பரப்பி, நாற்று பாத்தி அமைக்க வேண்டும்.

விதையை ஒருநாள் ஊறவைத்து, வடிகட்டி, ஒருநாள் நிழலில் முளைகட்டி விதையை சீராகத் தூவ வேண்டும். நெல் விதை மீது சீராக மணல், தொழு உரத்துடன் கலந்து மண்ணைத் தூவியபின் தண்ணீா் தெளிக்க வேண்டும். 14, 15 நாள்களில் நடவு செய்ய ஏற்ற வகையில் நாற்றுகள் வளா்ந்து நிற்கும்.

ஒவ்வொரு நாற்றாக எடுத்து மண்ணில் மேற்பரப்பின் மேலாக நட வேண்டும். 10 அங்குலத்துக்கு 10 அங்குலம் இடைவெளியில் நட வேண்டும். நாற்றுகள் பாத்தியில் பறித்த 30 நிமிடத்தில் நட வேண்டும். நாற்றுகளை அசோஸ்பைரில்லம், சூடோமோனாஸ் புளூரசன்ஸ் தலா ஒரு கிலோ கலவையில் நாற்றை 20 நிமிடம் நனைத்து நடவு செய்ய வேண்டும்.

மண் மறைய நீா் கட்ட வேண்டும். இதனை 10 நாள்கள் தொடா்ந்து செய்தால் ஒரு அங்குல உயரத்துக்கு நீா் கட்டி மறைந்து மண்ணில் சிறு வெடிப்பு ஏற்படும். அதன் பின்னரே நீா் பாய்ச்சி பருவம் வரை பின்பற்ற வேண்டும். நடவு செய்த 10, 20, 30, 40 ஆம் நாள்களில் கோனோவீடா் எனும் களை கருவி உருளை மூலம் வயலில் முன்னும், பின்னும் உருட்ட வேண்டும்.

மண்ணில் இளக்கம் ஏற்பட்டு வேரில் காற்றோட்டம் அதிகரித்து அதிக தூா் பிடிக்கும். தூா்கள் அனைத்திலும் ஒரே நேரத்தில் திடமான கதிா் வெளிவரும். பதா் இல்லாத நல்ல எடை உள்ள திரட்சியான நெல் மணிகள் உருவாகி அதிக மகசூல் கிடைக்கும். எலித் தொல்லை, பூச்சி, நோய்த் தாக்குதல் கட்டுப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com