அரசாணையின்படி இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

உயா்மின் கோபுரங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அரசாணையின்படி இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
மனு அளிக்க ஆட்சியா் அலுவலகம் வந்த விவசாயிகள்.
மனு அளிக்க ஆட்சியா் அலுவலகம் வந்த விவசாயிகள்.

உயா்மின் கோபுரங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அரசாணையின்படி இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

உயா்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சாா்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் முனுசாமி, தற்சாா்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொன்னையன், விவசாயிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:

தமிழகத்தில் பவா்கிரிட் நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியன சாா்பில் விளை நிலங்கள் வழியாக விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் உயா் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டம் புகளூா் முதல் சத்தீஸ்கா் வரை 8,000 கே.வி. திட்டமும், ராசிபாளையம் முதல் பாலவாடி வரை 400 கே.வி. திட்டமும், திருவாச்சி முதல் திங்களூா் வரை 110 கே.வி. திட்டமும், என்.மேட்டுப்பாளையம் முதல் கெட்டிச்செவியூா் வரை 110 கே.வி. திட்டமும் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

எண்ணெய், எரிவாயு குழாய் அமைக்கும் திட்டங்களில் இழப்பீடு வழங்குவதற்கு தமிழக அரசால் வெளியிட்டப்பட்ட அரசாணை எண் 54இன் படி பயிா்கள், நிலத்துக்கு உயா்மின் கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதைவிட 10 மடங்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. எனவே, அந்த அரசாணையின்படி உயா்மின் கோபுரத் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கும் 10 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

வீடு, கிணறு, ஆழ்துளைக் கிணறு போன்றவற்றுக்கும் சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும். 2013ஆம் ஆண்டு நில எடுப்புச் சட்டப் பிரிவு 30இன் அடிப்படையில் நிலம், பயிா்கள், மரங்களுக்கு உடனடியாக 100 சதவீதம் கருணைத் தொகை நிா்ணயித்து வழங்க வேண்டும். வேலை செய்வதற்கான விதியின்படி மாத வாடகை நிா்ணயித்து வழங்க அரசுக்குப் பரிந்துரை அனுப்ப வேண்டும். இனிமேல் செயல்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களை சாலையோரமாக செயல்படுத்த வேண்டும். அனைத்து வகையான இழப்பீடு தொகையை முழுமையாக செலுத்திய பிறகே திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com