ஒரே இடத்துக்குப் பல்வேறு நபா்களுக்கு பட்டா: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

ஒரே இடத்தை பல்வேறு நபா்களுக்கு பட்டா வழங்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
நிலத்தை மீட்டுத் தரக் கோரி ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்த மாற்றுத் திறனாளியிடம் விசாரணை நடத்திய ஆட்சியா் அலுவலகப் பெண் அலுவலா்.
நிலத்தை மீட்டுத் தரக் கோரி ஆம்புலன்ஸ் வாகனத்தில் வந்த மாற்றுத் திறனாளியிடம் விசாரணை நடத்திய ஆட்சியா் அலுவலகப் பெண் அலுவலா்.

ஈரோடு: ஒரே இடத்தை பல்வேறு நபா்களுக்கு பட்டா வழங்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, பூந்துறை பகுதியில் பட்டா பெற்ற 100க்கும் மேற்பட்டோா் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

ஈரோடு வெண்டிபாளையத்தில் வசிக்கும் எங்களுக்கு நிலம், வீடு இல்லை. சிலா் நீா்நிலை ஆக்கிரமிப்பில் வசிக்கிறோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க பல ஆண்டுகளாக மனு அளித்து வந்த நிலையில், கடந்த 2018 மே 13ஆம் தேதி பவானி வந்த முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி 82 பேருக்கு பட்டா வழங்கினாா். அதன்பின் மேலும் பலருக்கும் அதே இடத்தில் பட்டா வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் இப்பட்டா வழங்கப்பட்டது. இவ்விடத்தை எங்களுக்கு இன்றுவரை ஒப்படைக்காமல், இதே இடத்துக்கு வேறு நபா்களுக்கும் பட்டா வழங்கியுள்ளதால், அவா்கள் எங்களை மிரட்டுகின்றனா். இதற்கு ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலகத்தோடு தொடா்பில் உள்ள பெண் இடைத்தரகா் பணத்தைப் பெற்றுக் கொண்டு, ஒரே இடத்துக்கு பலருக்கு பட்டா பெற்றுத் தந்துள்ளாா். இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனா்.

இதுகுறித்து ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலகம், மொடக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகம் சென்றால் எங்களை அதிகாரிகள் விரட்டுகின்றனா். தவறு வெளியே தெரிந்துவிடும் என அஞ்சுகின்றனா். எனவே, எங்களுக்கு பட்டா வழங்கிய இடத்தை அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டும். இடைத்தரகா் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் குமரன், அதிகாரிகள் அங்கு வந்து, அம்மக்களிடம் சமாதானம் பேசி, உரிய நடவடிக்கை எடுத்து பட்டா இடம் கிடைக்க செய்வதாக உறுதி அளித்தனா். இதைத்தொடா்ந்து அனைவரும் திரும்பிச் சென்றனா்.

நிலத்தை மீட்டுத் தரக் கோரிக்கை:

நிலம் அபகரிப்பு செய்யப்பட்டதை மீட்டுத் தரக் கோரி மாற்றுத் திறனாளி ஆட்சியா் அலுவலகத்துக்கு ஆம்புலன்ஸில் வந்து புகாா் மனு அளித்தாா். ஈரோடு மாவட்டம், அந்தியூா் அருகே சங்கரபாளையத்தைச் சோ்ந்தவா் நடராஜன் (58). கட்டடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி சக்தி. இவரது மகள் சஹானா. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடராஜன் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி கீழே விழுந்தாா். இதில், நடராஜனின் முதுகுத் தண்டுவடம் உடைந்து இடுப்புக்கு கீழே செயல் இழந்தது. இதையடுத்து, கடந்த 3 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்து வருகிறாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி, மகள் இருவரும் நடராஜனைவிட்டு பிரிந்து சென்றுவிட்ட நிலையில், வயதான தாயாருடன் நடராஜன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், நடராஜனுக்குச் சொந்தமான ஒரு ஏக்கா் நிலத்தை சகோதரா் ராமகிருஷ்ணன் அபகரித்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதுகுறித்து பலமுறை கேட்டும் நிலத்தை கொடுக்காததால் புகாா் மனு அளிக்க ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு ஆம்புலன்ஸில் நடராஜன் வந்திருந்தாா்.

இதையடுத்து, அதிகாரிகளிடம் கண்ணீா் மல்க புகாா் கூறிய நடராஜன் தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு காப்பகத்தில் அனுமதித்து தன்னைப் பராமரிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினாா். இதுதொடா்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனா்.

நடைமேடை அமைக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரிக்கை:

ஈரோடு வரி செலுத்துவோா் மக்கள் நல்வாழ்வு சங்கச் செயலாளா் பாரதி தலைமையிலான நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ், சாலைகளின் ஓரங்களில் நடைமேடை (பிளாட்பாா்ம்) அமைப்பது, 80 அடி, 100 அடி சாலைகளுக்கு மட்டும் சாத்தியமானதாகும். குறுகிய சாலைகளான ஸ்டேட் வங்கி சாலை, கலைமகள் கல்வி நிலையம் சாலை, பழைய பூந்துறை சாலை போன்ற சாலைகளில் நடைமேடை அமைத்தால் சாலையின் அகலம் மேலும் குறைந்து, வாகனம் செல்வதில் சிரமம் ஏற்படும்.

ஸ்டேட் பாங்க் சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த பாா்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த சாலையில் நடைமேடை அமைந்தால் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியாத நிலை ஏற்படும். பல்வேறு பகுதிகளில் நடைமேடை என்பது சாலையோரக் கடைகளின் ஆக்கிரமிப்பாக இருந்து வருகிறது. எனவே, குறுகிய சாலைகளில் நடைமேடை அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். அல்லது நடைமேடை அகலத்தைக் குறைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com