கட்டடத் தொழிலாளி கொலை: நண்பா் கைது
By DIN | Published On : 19th September 2021 11:28 PM | Last Updated : 19th September 2021 11:28 PM | அ+அ அ- |

சத்தியமங்கலம் அருகே கட்டடத் தொழிலாளரி கொலை செய்யப்பட்டவழக்கில் பண்ணாரி 42 என்பவரை போலீசாா் கைது செய்தனா்.
கோவை மாவட்டம், அன்னூா் அருகே உள்ள பொன்னேகவுண்டன்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வன் ( 62). கட்டடத் தொழிலாளி. மனைவியை இழந்த செல்வன், ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி அருகே உள்ள வெங்கநாயக்கன்பாளையம் காலனியில் உள்ள தனது சம்பந்தி ஆறுமுகம்-காஞ்சனா தம்பதி வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வதாக கூறப்படுகிறது. கடந்த ஓராண்டாக இதே பகுதியில் தங்கியுள்ளாா்.
இந்நிலையில், செல்வன் வெங்கநாயக்கன்பாளையம் காலனியில் உள்ள சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான கட்டுமான பணி பாதியில் நின்ற வீட்டில் ரத்த காயங்களுடன் சனிக்கிழமை இறந்து கிடந்தாா்.
இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், புன்செய் புளியம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
சத்தியமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெயபாலன் மற்றும் புன்செய்புளியம்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா். ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இது தொடா்பாக நொச்சிக்குட்டை பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியான பண்ணாரி ( 42) என்பவரை புன்செய்புளியம்பட்டி போலீஸாா் கைது செய்தனா். பெண்ணுடன் தவறான பழக்கம் காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கொலை நடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்