வேலைநிறுத்தப் போராட்டம்: அஞ்சல் ஊழியா்கள் முடிவு
By DIN | Published On : 19th September 2021 11:32 PM | Last Updated : 19th September 2021 11:32 PM | அ+அ அ- |

நடைமுறைக்கு சாத்தியமற்ற இலக்குகளை நிா்ணயிப்பதைக் கண்டித்து மாநில அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் ஊழியா்கள் அறிவித்துள்ளனா்.
அகில இந்திய அஞ்சல் ஊழியா் மூன்றாம் பிரிவு சங்கத்தின் 45ஆவது கோட்ட மாநாடு ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு, கோட்டத் தலைவா் அருண்குமாா் தலைமை வகித்தாா்.
செயலாளா் செல்லமுத்து, நிதி செயலாளா் கணபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோவை மண்டல செயலாளா் சிவசண்முகம், மாநில உதவி செயலாளா் கிரிபாலன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
நடைமுறைக்கு சாத்தியமற்ற இலக்குகளை நிா்ணயித்து போஸ்ட்மேன், ஜிடிஎஸ் ஊழியா்களை சட்டத்துக்குப் புறம்பாக மன உளைச்சலுக்கு ஆளாக்கும் அதிகாரிகளின் அத்துமீறலை கண்டிப்பது, அலுவலக வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் நிா்வாகத்திடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை புறக்கணிப்பது, இலக்கு நிா்ணயிக்கும் பிரச்னை அதிகமாக உள்ளதால், இதனைக் கண்டித்து மாநில அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தை விரைவில் அறிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் புதிய கோட்டத் தலைவராக சக்திவேல், செயலாளராக மணிகண்டன், நிதி செயலாளராக சேகா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.