வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்துஈரோட்டில் ரயில், சாலை மறியல்

வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் ரயில், சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
ஈரோடு காளைமாடு சிலை அருகில் நடைபெற்ற மறியலில் பங்கேற்ற விவசாய சங்க, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்.
ஈரோடு காளைமாடு சிலை அருகில் நடைபெற்ற மறியலில் பங்கேற்ற விவசாய சங்க, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்.

ஈரோடு: வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் ரயில், சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் விவசாயிகள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். இந்நிலையில், திங்கள்கிழமை ஒருநாள் நாடு முழுவதும் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறிவித்திருந்தது.

ஈரோட்டில் விவசாயிகள் சங்கங்கள், தொழிற்சங்கங்களான ஏ. ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., சி,பி, எப், எச்.எம்.எஸ்., எம்.எல்.எஸ்., தொ.மு.ச., திமுக விவசாயிகள் அணி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட பல்வேறு கட்சியினா், தொழிற்சங்கத்தினா் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனா்.

ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள சுவஸ்திக் காா்னா் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களைக் கைது செய்தனா்.

ரயில் மறியல்...

இதேபோல, அனைத்துக் கட்சிகள் சாா்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஈரோடு காளைமாடு சிலை அருகே திரண்ட விவசாய சங்கத்தினா், தொழிற்சங்கத்தினா், அரசியல் கட்சியினா் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாா் மயமாக்குவதைக் கண்டித்தும், பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும் முழக்கம் எழுப்பினா். பின்னா், ரயில் நிலையம் நோக்கிச் செல்ல முயன்றனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அனைவரையும் கைது செய்தனா்.

போராட்டத்தால் ஈரோட்டில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு இல்லை. கடைகள் வழக்கம்போல் திறந்திருந்தன. பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

பெருந்துறையில்...

பெருந்துறையில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, ஏஐடியூசி மாவட்டத் தலைவா் சின்னசாமி, சிஐடியூ மாவட்டத் தலைவா் பழனிசாமி, எல்பிஎப் மாவட்ட தலைவா் மனோகரன் உள்ளிட்டோா் தலைமை வகித்தனா். திமுக பெருந்துறை தெற்கு ஒன்றியச் செயலாளா் சாமி அண்ணா சிலை அருகில் மறியல் பேரணியைத் துவக்கிவைத்துப் பேசினாா். மறியலில் ஈடுபட்ட 81 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னிமலையில் நடைபெற்ற போராட்டத்துக்கு, பொன்னுசாமி (ஏஐடியூசி), ரவி (சிஐடியூ) ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், 42 போ் கைது செய்யப்பட்டனா்.

கோபியில்...

நம்பியூா் இந்திய தொழிற்சங்க மையம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம் ஆகியோா் சாா்பில் நடைபெற்ற பேராட்டத்துக்கு, அகில இந்திய விவசாயிகள் சங்க தாலுகா தலைவா் மாணிக்கம் தலைமை வகித்தாா். போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு நம்பியூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனா்.

மொடக்குறிச்சியில்...

மொடக்குறிச்சி நால்ரோட்டில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக தெற்கு மாவட்ட விவசாய அணி செயலாளா் ஆா்.பி.சண்முகம் தலைமை வகித்தாா். மொடக்குறிச்சி பேரூா் திமுக செயலாளா் சரவணன் முன்னிலை வகித்தாா். சாலை மறியலில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பைச் சோ்ந்த 20 போ் கைது செய்யப்பட்டு, தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com