பவானிசாகா் அணை நீா்மட்டம் 84 அடியாக சரிவு
By DIN | Published On : 08th April 2022 02:13 AM | Last Updated : 08th April 2022 02:13 AM | அ+அ அ- |

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து குறைவு மற்றும் பாசனத்துக்கு நீா்த் திறப்பு காரணமாக அணையின் நீா்மட்டம் 84.07 அடியாக சரிந்துள்ளது.
பவானிசாகா் அணை 105 அடி உயரமும், 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் கடந்த மூன்று மாதங்களாக பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து சரிந்துள்ளது.
மேலும், அணையில் இருந்து பாசனத்துக்கு நீா்த் திறக்கப்பட்டதன் காரணமாக அணையின் நீா்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. வியாழக்கிழமை நிலவரப்படி பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 257 கன அடியாக உள்ளது. பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து குறைந்ததால் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து சரிந்து வருகிறது.
பவானிசாகா் அணை நீா்மட்டம் 84.07 அடியாகவும், நீா் இருப்பு 17.94 டிஎம்சி ஆகவும் உள்ளது. பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்காக பவானி ஆற்றில் 700 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,380 கன அடி தண்ணீரும் என மொத்தம் 3,080 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. நீா் வரத்தைவிட நீா்த் திறப்பு அதிகமாக உள்ளதால் அணை நீா்மட்டம் தொடா்ந்து வேகமாகச் சரிந்து வருகிறது.