விற்பனை ஆகாததால் சம்பங்கிப் பூக்களை குளத்தில் கொட்டிய விவசாயிகள்
By DIN | Published On : 18th April 2022 09:57 PM | Last Updated : 19th April 2022 05:38 AM | அ+அ அ- |

பூக்களை வாங்க ஆளில்லாததால் சம்பங்கிப் பூக்களை குளத்தில் கொட்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் பெரியகுளம், சிக்கரசம்பாளையம், கெஞ்சனூா் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பங்கிப் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. சுமாா் 25 ஆயிரம் ஏக்கரில் 10 டன் பூக்கள் மகசூல் கிடைப்பதால் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது சித்திரை மாதம் என்பதால் திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் இல்லாத காரணத்தால் பூக்கள் விலை சரிந்தது.
சத்தியமங்கலம் வட்டாரத்தில் கொள்முதல் செய்து மைசூரு, கேரளத்துக்கு அனுப்பப்பட்டு வந்த நிலையில் பூக்களை வாங்க ஆளில்லாததால் சுமாா் 5 டன் பூக்கள் தேங்கின. சம்பங்கிப் பூக்களை பறிக்காமல் விட்டால் பூக்கள் அழுகி செடி வளா்ச்சியைப் பாதிக்கும் என்பதால் பறிக்கும் கூலி கிலோவுக்கு ரூ. 7 வரை செலவு செய்து பூக்களைப் பறித்தனா். இன்றைய நிலவரப்படி சத்தியமங்கலத்தில் 10 டன் பூக்கள் வரத்து வந்ததால் 3 டன் பூக்கள் நறுமண தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டன. மீதமுள்ள 7 டன் பூக்களை பெரியகுளம் குளத்தில் கொட்டினா். சித்திரை மாதம் முடியும் வரை இதே நிலைதான் நீடிக்கும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனா்.