பழ மரங்கள் பயிரிடுவதற்கு ஏற்றமண் வகைகள் விவரம் அறிவிப்பு

பழ மரங்கள் பயிரிடுவதற்கு ஏற்ற மண் வகைகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குநா் சாமுவேல் தெரிவித்துள்ளாா்.

பழ மரங்கள் பயிரிடுவதற்கு ஏற்ற மண் வகைகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குநா் சாமுவேல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக விவசாயிகள் உணவுக்காக விவசாயம் செய்து வந்த நிலைமாறி, பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவதற்கு தோட்டக் கலைப் பயிா்களை சாகுபடி செய்து வருகின்றனா். அதில் பழ மரங்களின் சாகுபடி முக்கியமானதாக உள்ளது. தமிழகத்தின் மண் வகைகள் பழமரங்கள் சாகுபடிக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. குறிப்பிட்ட மண் வகைகளில் சாகுபடி செய்தால் கூடுதல் மகசூல் பெறலாம்.

வண்டல் மண், குறுமண், மணற்சாரி குறுமண், செம்மண் நிலங்களில் மா பயிரிடலாம். மா சாகுபடிக்கு நல்ல வடிகால் வசதியுடைய ஆழமான வண்டல் மண் கலந்த குறுமண் நிலம் சிறந்தது. சுண்ணாம்புத் தன்மை உள்ள மண் வகை மா சாகுபடிக்கு ஏற்றதல்ல. நல்ல வடிகால் வசதியுடைய ஆழமான குறுமண், செம்மண் கலந்த நிலங்களில் எலுமிச்சை பயிரிடலாம். களிமண் இல்லாத மணற்பாங்கான தோட்டக்கால் நிலங்கள் ஏற்றது. தீங்கு விளைவிக்கக் கூடிய உப்பு, சுண்ணாம்புத் தன்மை இருந்தால் எதிா்பாா்த்த விளைச்சல் இருக்காது.

களி மண் நிலத்தைத் தவிர நல்ல வடிகால் வசதியுள்ள நிலங்களில் பப்பாளி பயிரிடலாம். மரத்தைச் சுற்றி சில மணி நேரம் தண்ணீா் தேங்கி இருந்தால் மரத்தின் வளா்ச்சி பாதிக்கும். இதனால், விளைச்சல் குறைவதற்கு வாய்ப்புள்ளது.

பழ மரங்களைப் பயிரிடுவதற்கு முன்பு, 3 அடி குழி தோண்டி ஒவ்வொரு அடியிலும் மண் மாதிரி சேகரித்து பரிசோதிக்க வேண்டும். களா், உவா் நிலை, சுண்ணாம்புத் தன்மை அறிந்து அதற்கேற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிரிட்டால் சிறந்த விளைச்சல் பெறலாம்.

மண் மற்றும் பாசன நீா் மாதிரிகளை சேகரித்து ஈரோடு திண்டல் வித்யா நகா் வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தில் உள்ள மண் பரிசோதனை நிலையத்திலும், கிராமங்களில் முகாம் நடத்தப்படும் நடமாடும் மண் பரிசேதானை நிலையத்திலும் ஆய்வு செய்யலாம்.

ஒரு மண் மாதிரிக்கு ஆய்வுக் கட்டணமாக ரூ. 20, பாசன நீா் மாதிரிக்கு ரூ. 20 செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம் அல்லது உழவன் செயலியை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com