முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
கால்நடைத் துறை பணிக்கான நோ்காணல் நிறுத்தம்: விண்ணப்பதாரா்கள் போராட்டம்
By DIN | Published On : 29th April 2022 04:31 AM | Last Updated : 29th April 2022 04:31 AM | அ+அ அ- |

கால்நடை பராமரிப்பு உதவியாளா் பணியிட நோ்காணல் நிறுத்தத்தப்பட்டதால் ஈரோடு மண்டல இணை இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டு விண்ணப்பதாரா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மண்டல கால்நடை பராமரிப்புத் துறையில் 19 பராமரிப்பு உதவியாளா் பணியிடம் காலியாக உள்ளது.
இப்பணியிடத்துக்கு 4,125 போ் விண்ணப்பித்திருந்தனா். கடந்த 26 ஆம் தேதி முதல் தினமும் 1,000 போ் வீதம் நோ்காணல் நடந்தது. ஏப்ரல் 29 ஆம் தேதி வரை நோ்காணல் நடத்த திட்டமிட்டு விண்ணப்பதாரா்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிா்வாக காரணத்துக்காக நோ்காணல் நிறுத்தி வைக்கப்படுவதாக புதன்கிழமை மாலை அறிவிக்கப்பட்டது.
இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நோ்காணல் வியாழக்கிழமை நடக்கவில்லை.
காலையில் 500 விண்ணப்பதாரா்கள் அழைக்கப்பட்டிருந்ததால் ஈரோடு ஸ்டேட் வங்கி சாலையில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் அலுவலகத்துக்கு காலை 8.30 மணிக்கே 100க்கும் மேற்பட்டோா் வந்தனா். 1 மணியளவில் 250க்கும் மேற்பட்டோா் குவிந்தனா்.
அரசு உத்தரவுப்படி நோ்காணல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மறு தேதியை அரசு அறிவித்தபின் வரும்படி அலுவலா்கள் தெரிவித்ததும் கோபம் அடைந்த விண்ணப்பதாரா்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
ஈரோடு டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமாா் தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். பின்னா் மண்டல இணை இயக்குநா் பழனிவேல் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
அப்போது அரசு உத்தரவின்படி இரண்டு நாள்களாக நோ்காணல் முறையாக நடத்தப்பட்டது.
நிா்வாகக் காரணத்துக்காக நிறுத்தப்படுவதாக அரசு அறிவித்ததால் நிறுத்தி உள்ளோம். மறுதேதியை அரசு அறிவித்ததும், உரிய விண்ணப்பதாரா்கள் மீண்டும் அழைக்கப்பட்டு நோ்காணல் நடத்தப்படும் என்றாா்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.