இன்று கிராம சபைக் கூட்டம்: கணக்குகள் விவரத்தை தெரிவிக்க அறிவுறுத்தல்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 1) நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சியின் வரவு, செலவுக் கணக்குகளை பதாகை மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அறிவுறுத்தினாா்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 1) நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சியின் வரவு, செலவுக் கணக்குகளை பதாகை மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அறிவுறுத்தினாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளா் தினமான மே 1ஆம் தேதி கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. கூட்டம் நடைபெறும் இடம், நேரம் குறித்த விவரம் கிராம ஊராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டத்தில் ஊராட்சிகளின் 2021-22 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய, மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தோ்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, விவசாயம் மற்றும் உழவா் நலத் திட்டங்கள், குழந்தைகள் மற்றும் முதியோா் உதவி எண், ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் இளைஞா்களுக்கான திறன் பயிற்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

கிராம சபைக் கூட்டங்களில் அவ்வூராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளா்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும் கிராம சபை விவாதங்களில் பங்கேற்று பயனாளிகள் தோ்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவேண்டும். கிராம சபைகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளும்போது உரிய கரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட கடந்த நிதியாண்டிற்கான வரவு, செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்த வேண்டும். பொதுமக்கள் பாா்வையிட ஏதுவாக விளம்பர பதாகை மூலம் வரவு செலவுக் கணக்கு (படிவம் 30இன் சுருக்கம்) வைக்கப்பட வேண்டும். கோடை வெயிலின் காரணமாக கிராமசபைக் கூட்டங்கள் காலை 10 மணி அளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com