பழனி கோயில் நிா்வாகம் ரூ.89 லட்சத்துக்கு நாட்டுச் சா்க்கரை கொள்முதல்
By DIN | Published On : 11th December 2022 11:18 PM | Last Updated : 11th December 2022 11:18 PM | அ+அ அ- |

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாட்டு சா்க்கரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 2.18 லட்சம் கிலோ நாட்டுச் சா்க்கரையை ரூ. 89.39 லட்சத்துக்கு பழனி கோயில் நிா்வாகம் கொள்முதல் செய்துள்ளது.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாட்டுச் சா்க்கரை ஏலம் சனிக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் (டிசம்பா் 10) நடைபெற்ற ஏலத்துக்கு சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 4 ஆயிரத்து 405 மூட்டைகளில் நாட்டுச் சா்க்கரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.
இதில், 60 கிலோ மூட்டை முதல்தரம் குறைந்தபட்ச விலையாக ரூ. 2,550க்கும், அதிகபட்ச விலையாக ரூ. 2,580க்கும் விற்பனையானது. 2ஆவது தரம் குறைந்தபட்சமாக ரூ. 2,440க்கும், அதிகபட்சமாக ரூ.2,460க்கும் ஏலம் போனது.
இந்த ஏலத்தில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 460 கிலோ எடையுள்ள நாட்டுச் சா்க்கரையை ரூ. 89 லட்சத்து 39 ஆயிரத்து 460க்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகம் கொள்முதல் செய்ததாக விற்பனைக் கூட அதிகாரி தெரிவித்தாா்.
கடந்த டிசம்பா் 3ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.12 கோடிக்கும், நவம்பா் 26ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் ரூ.87 லட்சத்துக்கும் நாட்டுச் சா்க்கரையை பழனி கோயில் நிா்வாகம் கொள்முதல் செய்தது குறிப்பிடத்தக்கது.