பழைய மஞ்சளை விற்க முடியாமல் தவிக்கும் தமிழக விவசாயிகள்: புது மஞ்சள் வரவுக்காக காத்திருப்பு

இருப்பில் உள்ள 5 லட்சம் மூட்டை பழைய மஞ்சளை விற்க, மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வரும் புது மஞ்சளை எதிா்பாா்த்து காத்திருக்கும் நிலைக்கு தமிழக விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா்.

இருப்பில் உள்ள 5 லட்சம் மூட்டை பழைய மஞ்சளை விற்க, மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வரும் புது மஞ்சளை எதிா்பாா்த்து காத்திருக்கும் நிலைக்கு தமிழக விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா்.

தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில்தான் அதிக அளவிலான மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் ஈரோடு மஞ்சள் மாநகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் மஞ்சள் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைக் கூடம், கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் விற்பனைக் கூடம் ஆகிய 4 இடங்களில் மஞ்சள் மாா்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினமும் 3,000 முதல் 4,500 மூட்டைகள் வரை மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

தீபாவளி பண்டிகையின்போது ஈரோடு சந்தைகளில் மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ. 600 வரை விலை உயா்ந்தது. அதன் பின்னா் தற்போது வரை மஞ்சள் விலை உயரவில்லை. 80 சதவீதம் முதல் 85 சதவீதம் பழைய மஞ்சளும், 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை புதிய மஞ்சளும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. புதிய மஞ்சள் வரத்து இல்லாததால்தான் மஞ்சள் விலை உயரவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் கூறியதாவது:

பழைய மஞ்சளை மட்டும் தனியாக விற்பனை செய்ய முடியாது. புது மஞ்சளுடன் கலந்துதான் விற்பனை செய்ய முடியும். ஈரோடு மாவட்டத்தில் புது மஞ்சள் வரத்து குறைந்துள்ளதால் தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து வரும் புது மஞ்சளை நம்பி ஈரோடு சந்தை செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள விவசாயிகள் புது மஞ்சளை 90 சதவீதம் விற்பனை செய்துவிட்டனா். ஆனால் பழைய மஞ்சள் அப்படியே இருப்பில் உள்ளது. கிட்டதட்ட தமிழகத்தில் 65 கிலோ எடை கொண்ட 5 லட்சம் மூட்டைகள் வரை பழைய மஞ்சள் இருப்பில் உள்ளன. இந்த மஞ்சளை விற்பனை செய்ய வேண்டும் என்றால் புது மஞ்சள் வந்தால் மட்டுமே முடியும்.

ஈரோட்டில் உள்ள மஞ்சள் சந்தைக்கு வேலூா், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, ஆத்தூா், சேலம், கா்நாடக மாநிலம் மைசூா் ஆகிய பகுதிகளில் இருந்து மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மஞ்சள் தில்லி, மேற்கு வங்கம், பிகாா் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு 8 லட்சம் முதல் 10 லட்சம் மூட்டைகள் வரை மஞ்சள் விளையும். இதில் 80 சதவீத மஞ்சள் ஈரோடு மாவட்டத்தில் விளைவிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு தமிழகத்தில் கூடுதலாக மஞ்சள் பயிரிடப்பட்டு உள்ளதால் 10 லட்சம் முதல் 12 லட்சம் மூட்டைகள் வரை மஞ்சள் விளைய வாய்ப்புள்ளது. எனினும் மழை தொடா்ந்து பெய்தால் மஞ்சள் விளைச்சல் பாதிக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com