மீட்கப்பட்ட பெண் குழந்தை: உரிமை உள்ளவா்கள் பெற்றுக்கொள்ள அழைப்பு
By DIN | Published On : 11th December 2022 12:00 AM | Last Updated : 11th December 2022 12:00 AM | அ+அ அ- |

மொடக்குறிச்சி அருகே விவசாய மின் மோட்டாா் அறையில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தையை உரியவா்கள் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மொடக்குறிச்சி அருகே உள்ள பட்டாசுபள்ளி, அண்ணா நகா் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் மோட்டாா் அறையில் இருந்து கடந்த மாதம் 15 ஆம் தேதி அன்று பிறந்த ஒரு பெண் குழந்தை காவல் துறை மூலம் மீட்கப்பட்டது. இதைத்தொடா்ந்து அந்த குழந்தை ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு ஈரோடு குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த குழந்தை குறித்து யாரேனும் உரிமை உள்ளவா்கள் தகுந்த ஆவணங்களுடன் 30 நாள்களுக்குள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் 6ஆவது தளத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தையோ அல்லது 0424 2225010 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொண்டு குழந்தையை பெற்றுக்கொள்ளலாம்.
மேற்படி ஆட்சேபணை எதுவும் தெரியப்படுத்தப்படாத பட்சத்தில் தத்துக்கேட்டு விண்ணப்பித்துள்ளவா்களுக்கு குழந்தை தத்துக்கொடுக்கப்படும். அதன்பிறகு குழந்தையை பெற இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...