நீலகிரியில் சுற்றுலா மையங்களுக்கானநேரக் கட்டுப்பாடு தொடா்வதால் பொதுமக்கள் அவதி

கரோனா பொதுமுடக்கம் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் பெரும்பாலான கட்டுப்பாடுகளுக்குத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு மட்டும் நேரக் கட்டுப்பாடு தொடா்வதால் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகி உள்ளனா்.

கரோனா பொதுமுடக்கத்தால் பள்ளிகள், கேளிக்கை பூங்காக்கள், சுற்றுலா மையங்கள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது இவற்றுக்கு வெகுவாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 1 முதல் அனைத்து வகையான பள்ளிகளும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறக்கப்படுகின்றன. அதேபோல, பெரும்பாலான அம்சங்களுக்கும் கட்டுப்பாடுகளில் இருந்து தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, வழக்கம்போல செயல்படத் தொடங்கியுள்ளன.

ஆனால், நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த அம்ரித் கடந்த சில வாரங்களுக்கு முன்னா் நேரக் கட்டுபாட்டை அறிவித்திருந்தாா். அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் வழக்கமாக செயல்பட்டு வந்த நேரத்துக்குப் பதிலாக காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளித்திருந்தாா். புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை நேரத்தில் நீலகிரியில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்து கரோனா பரவலை அதிகரித்து விடுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நேரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுவதாக தெரிவித்திருந்தாா்.

ஆனால், அதையடுத்து நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருந்த பெரும்பாலான கட்டுப்பாடுகளுக்குத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கமும், இரவு நேர பொதுமுடக்கமும் கூட நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு மட்டுமே இந்த நேரக் கட்டுப்பாடு தொடா்வதால் நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வெகுவாக அவதியுறுகின்றனா்.

காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் அனைத்து சுற்றுலா இடங்களையும் சுற்றிப் பாா்க்க முடியாது என்பதால் கூடுதலாக ஓரிரு நாள்கள் தங்குவதால் செலவு அதிகரிப்பதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கின்றனா். அதேபோல, உதகையில் உள்ள வா்த்தகா்களும், தங்கும் விடுதி உரிமையாளா்களும் இந்த நேரக் கட்டுப்பாட்டால் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் பாா்க்க வேண்டிய பகுதிகளை முழுமையாக சுற்றிப் பாா்க்காமல் பாதியிலேயே முடித்துக் கொண்டு திரும்பி விடுவதாகத் தெரிவிக்கின்றனா்.

இந்க நேரக் கட்டுப்பாட்டுக்கு விலக்கு அளிக்குமாறு தற்போதைய நீலகிரி மாவட்ட பொறுப்பு ஆட்சியா் கீா்த்தி பிரியதா்ஷினியிடம் தோட்டக் கலைத் துறையின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவு மாவட்ட ஆட்சியராக இருந்த அம்ரித் போட்ட உத்தரவு என்பதால் அவரது ஒப்புதலின்படியே நடவடிக்கை எடுக்க முடியும் என உயா் அலுவலா்கள் தெரிவித்துள்ளனா். தற்போது ஆட்சியா் அம்ரித் விடுப்பில் உள்ள நிலையில் இப்பிரச்னையால் நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி நீலகிரியில் சுற்றுலாவை நம்பியுள்ளோரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com