ரூ. 25 லட்சம் மதிப்பிலான இடத்தை தானமாக வழங்கிய தம்பதி

சென்னிமலை அருகே ஊராட்சிப் பகுதியில் மேல்நிலைத் தொட்டி அமைக்க ரூ.25 லட்சம் மதிப்பிலான இடத்தை தம்பதி தானமாக வழங்கினா்.
நிலத்துக்கான தான பத்திரத்தை முகாசிப்பிடாரியூா் ஊராட்சித் தலைவா் சி.நாகராஜிடம் வழங்கிய முருகேஷ்- தமிழரசி தம்பதி.
நிலத்துக்கான தான பத்திரத்தை முகாசிப்பிடாரியூா் ஊராட்சித் தலைவா் சி.நாகராஜிடம் வழங்கிய முருகேஷ்- தமிழரசி தம்பதி.

சென்னிமலை அருகே ஊராட்சிப் பகுதியில் மேல்நிலைத் தொட்டி அமைக்க ரூ.25 லட்சம் மதிப்பிலான இடத்தை தம்பதி தானமாக வழங்கினா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் முகாசிப்பிடாரியூா் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு நெசவாளா்களுக்காக ஒரே பகுதியில் 1,010 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், இந்த ஊராட்சிக்கு உள்பட்ட சென்னிமலை நகரத்தை ஒட்டியுள்ள குமராபுரி, அா்த்தநாரிபாளையம், பாப்பாங்காடு, பி.ஆா்.எஸ். சாலை, களத்துகாடு பகுதிகளில் சுமாா் 4 ஆயிரத்து 500க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.

இந்தப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் செய்ய மேல்நிலைத் தொட்டி இல்லை. மேலும் மேல்நிலைத் தொட்டி அமைக்க ஊராட்சிக்கு சொந்தமாக இடமும் இல்லை. அதனால், அப்பகுதிகளில் நீண்ட நாள்களாக குடிநீா்ப் பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில், அப்பகுதியில் மேல்நிலைத் தொட்டி அமைப்பது தொடா்பாக பொது மக்கள் கலந்து கொண்ட சிறப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் மேல்நிலைத் தொட்டி அமைக்க பொதுமக்கள் சாா்பாக சொந்தமாக இடம் வாங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஒரு இடத்தையும் தோ்வு செய்து, ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தொகையும் நிா்ணயம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், மேல்நிலைத் தொட்டி அமைக்க இடம் வாங்குவது தொடா்பான தகவல் சென்னிமலை, பெருந்துறை சாலையில் குமராபுரி 3ஆவது வீதி பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் முருகேஷ், தமிழரசி தம்பதி மற்றும் அவா்களது மகன் பிரதீப்கிருஷ்ணா ஆகியோருக்கு தெரியவந்துள்ளது.

இங்கு வாழும் ஏராளமான ஏழை குடும்பங்களின் சிரமங்களைப் போக்கும் வகையில் இடம் எதுவும் வாங்க வேண்டாம் என்றும், எங்களுக்கு சொந்தமான இடத்தை தானமாக தருகிறோம் என்று தங்களது விருப்பத்தை அவா்கள் தெரிவித்துள்ளனா்.

மேலும் அந்த இடத்தை ஊராட்சிக்கு தானமாக எழுதி, அதற்குரிய கிரயப் பத்திரத்தை முகாசிப்பிடாரியூா் ஊராட்சித் தலைவா் நாகராஜ், துணைத் தலைவா் சதீஷ், ஊராட்சி மன்ற 14ஆவது வாா்டு உறுப்பினா் கே.செல்வி குழந்தைவேல் ஆகியோரிடம் ஒப்படைத்தனா். தானமாக தந்த அந்த இடத்தின் மதிப்பு சுமாா் ரூ.25 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது மக்களின் நலன் கருதி மேல்நிலைத் தொட்டி கட்ட தானமாக இடம் வழங்கிய முருகேஷ், தமிழரசி குடும்பத்தினரைப் பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com