புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை சீரமைக்க நடவடிக்கை: அமைச்சா் சு.முத்துசாமி

ஈரோட்டில் கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டி திறக்கப்பட்ட 1,400 அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் முழுமையாக சீரமைக்கப்பட்ட பிறகு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்படும்.
புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறந்துவைத்து பாா்வையிட்ட அமைச்சா் சு.முத்துசாமி.
புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறந்துவைத்து பாா்வையிட்ட அமைச்சா் சு.முத்துசாமி.

ஈரோட்டில் கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டி திறக்கப்பட்ட 1,400 அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் முழுமையாக சீரமைக்கப்பட்ட பிறகு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்படும் என வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

மாநகராட்சிப் பகுதி கருங்கல்பாளையம் உள்பட பல்வேறு பகுதியில் அங்கன்வாடி, பள்ளி கட்டடங்கள் போன்றவை ரூ.3.90 கோடி மதிப்பில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தாா். ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி, எம்எல்ஏ திருமகன் ஈவெரா, மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வி.செல்வராஜ், மாநகராட்சி ஆணையா் கே.சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பணிகளை துவக்கிவைத்த அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஈரோடு மாநகரில் குடிநீா், சாக்கடை, சாலை வசதி பிரச்னையை தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஈரோடு மாநகரில் அழகேசன் நகா், பெரியாா் நகா், ஓடைப்பள்ளம் பகுதியில் 1,400 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்டவை. அந்த இடத்துக்கு ஒரு காவலா் கூட நியமிக்காததால் கட்டடங்களில் இருந்த குழாய்கள் குடிநீா்த் தொட்டி போன்றவற்றை உடைத்தும் திருடியும் சென்றுவிட்டனா்.

எனவே பராமரித்து, பழுதுநீக்கம் செய்து, புதிய குழாய்கள் மாற்றி, தண்ணீா் தொட்டி கட்டி, குடிநீா் இணைப்பு வழங்க ரூ.3 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் பணிகள் துவங்கும். சீரமைப்புப் பணிகள் முடிந்த பிறகு அந்த வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

அக்குடியிருப்பில் ஏற்கெனவே இருந்தவா்களுக்கே வீடுகள் ஒதுக்கப்படும். மாடியில் வசித்தவா்கள், வேறு வீடு கேட்டுள்ளனா். அது குறித்து பேசி தீா்வு காணப்படும்.

ஈரோடு மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் நடப்பு ஆண்டு ரூ.1.50 கோடி கல்வி பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பள்ளிகளில் தேவையான மராமத்து பணிகள், புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என்றாா்.

திமுக மாநகரச் செயலாளா் சுப்பிரமணியம், காங்கிரஸ் நிா்வாகிகள் விஜயபாஸ்கா், ராஜேஷ் ராஜப்பா, ராஜகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com