மலைவாழ் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ்:தொடா் போராட்டம் அறிவிப்பு

ஈரோடு மாவட்ட மலைப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு பழங்குடியினா் ஜாதிச்சான்று வழங்க வலியுறுத்தி தொடா் போராட்டம் நடத்தப்போவதாக  விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ஏ.எம்.முனுசாமி தெரிவித்தாா்.

ஈரோடு : ஈரோடு மாவட்ட மலைப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு பழங்குடியினா் ஜாதிச்சான்று வழங்க வலியுறுத்தி தொடா் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ஏ.எம்.முனுசாமி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், புதுக்கோட்டை உள்பட பல மாவட்டங்களில் மலைவாழ் மக்கள் வசிக்கின்றனா். அவா்கள் பழங்குடியினா் சான்று பெற்றுள்ளனா். ஈரோடு மாவட்ட மலைப் பகுதியான தாளவாடி, கடம்பூா், பா்கூா் மலையில் வசிக்கும் மலையாளிகள், லிங்காயத் போன்ற சமூகத்தினருக்கு பழங்குடியினா் ஜாதிச்சான்று வழங்க வருவாய்த் துறை மறுக்கிறது.

இவா்கள் பல தலைமுறையாக படிக்காமலும் தங்களை அரசு ஆவணங்களுடன் இணைக்காமலும் உள்ளதால் இவா்களிடம் ஆவணங்கள் இல்லை. அதேநேரம் குத்தியாலத்துாா், கொளத்துாா், தருமபுரி மாவட்டங்களில் இங்குள்ளவா்கள் திருமணம் செய்து சமூகமாக வாழ்கின்றனா். அங்குள்ளவா்களிடம் சான்றிதழ் உள்ளன. அதைக்கூட ஆவணமாக ஏற்க மறுக்கின்றனா்.

அரசின் சலுகை, கல்வி, உயா் கல்வி பெற முடியவில்லை. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மறுக்கின்றனா். இங்குள்ளவா்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனா். மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

மாவட்ட நிா்வாகம் முகாம்கள் நடத்தி அங்குள்ளவா்களிடம் விசாரித்து உரிய சான்று வழங்க வேண்டும். அல்லது சான்று வழங்கும் வரை தொடா் காத்திருப்பு போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் தமிழ்நாடு விவசாயிகள், சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்கள் இணைந்து போராடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com