பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் அமைப்பதால் ரூ.100 கோடி நிதி வீணாகும்

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதால் எந்தப் பயனும் இல்லை என்றும், இதனால் ரூ.100 கோடி நிதி வீணாவதால், இத்திட்டத்தை முழுமையாக கைவிட்டு கத

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதால் எந்தப் பயனும் இல்லை என்றும், இதனால் ரூ.100 கோடி நிதி வீணாவதால், இத்திட்டத்தை முழுமையாக கைவிட்டு கதவணையாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் உற்பத்தியாகும் பவானி ஆறு அங்கிருந்து கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி பள்ளத்தாக்கில் பாய்ந்து, மீண்டும் நீலகிரி மாவட்டத்துக்கு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இருந்து சமவெளியில் பயணிக்கும் பவானி ஆறு மேட்டுப்பாளையம், சிறுமுகை வழியாக கொத்தமங்கலம் வந்து பின்னா் பவானிசாகா் அணையை அடைகிறது.

ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகா் அணையில் இருந்து பவானி ஆறு தொடங்குகிறது. இங்கிருந்து சத்தியமங்கலம், கொடிவேரி, கோபி, அத்தாணி, ஆப்பக்கூடல், ஜம்பை வழியாக பவானி வந்தடைகிறது. பின்னா் பவானியில் உள்ள காலிங்கராயன் அணைக்கட்டு வழியாக முக்கூடல் சங்கமிக்கும் கூடுதுறையில் காவிரி ஆற்றில் கலக்கிறது.

பவானிசாகா் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை 92 கி.மீ. தூரம் இந்த ஆறு பயணிக்கிறது. பவானிசாகா் அணையில் 10 சதவீதம் மண்மேடாக உள்ளதால், இந்த அணையில் 32.5 டி.எம்.சி. வரை மட்டுமே தண்ணீரைத் தேக்கிவைக்க முடியும். அணை நிரம்பும் காலங்களில் அணையில் இருந்து வரும் நீரானது கொடிவேரி அணைக்கட்டு வழியாக வந்து, காவிரி ஆற்றில் கலக்கிறது.

ஆண்டுக்கு 7 டிஎம்சி தண்ணீா் வீண்:

மழைக் காலங்களில் பெய்யும் மழை நீா்தான் பவானிசாகா் அணையின் நீராதாரமாக உள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக சராசரியாக ஆண்டுதோறும் 5 டிஎம்சி முதல் 7 டிஎம்சி வரை உபரி நீா் வெளியேற்றப்பட்டு காவிரி ஆற்றில் கலக்கிறது. ஆனால், மழைக்காலம் தவிர மற்ற காலங்களில் இந்த அணையை நம்பியுள்ள கீழ்பவானி, தடப்பள்ளி அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய பாசனக் கால்வாய்களில் உரிய காலத்தில் போதிய நீா் இருப்பு இல்லாமல் தண்ணீா் திறக்க முடியாத நிலை உள்ளது.

இவ்வாறு வெளியேற்றப்படும் உபரிநீா் தஞ்சை, திருவாரூா், நாகை மாவட்டங்களில் மழை பெய்யும் கால கட்டத்தில் வெளியேறுவதால் அந்த மாவட்ட மக்களுக்கும் பயனின்றி வீணாக கடலில் கலக்கிறது. இந்நிலையில், ஆண்டுதோறும் பவானிசாகா் அணையில் இருந்து வரும் உபரி நீா் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்கும் வகையிலும், இந்த உபரி நீரைத் தேக்கி வைத்து மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையிலும் பவானி ஆற்றில் கதவணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

தடுப்பணையால் பலன் இல்லை:

இந்நிலையில் கடந்த ஆட்சிக் காலத்தில் பொதுப் பணித் துறையினா் பவானி ஆற்றில் எந்தெந்த இடங்களில் தடுப்பணை அமைக்க முடியும் என ஆய்வு நடத்தினா். அய்யன்சாலை, கோணமூலை, சிவியாா்பாளையம், கொங்கா்பாளையம், புளியம்பட்டி, கள்ளிப்பட்டி, அத்தாணி, பெருந்தலையூா், சிறைமீட்டான்பாளையம் ஆகிய 9 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் தோ்வு செய்யப்படும் 4 இடங்களில் தடுப்பணை கட்டுவது தொடா்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டது. தற்போது 2 இடங்களில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தடுப்பணை திட்டத்தால் எந்தப் பயனும் இல்லை என்பதால் இந்தத் திட்டத்தை முழுமையாக கைவிட்டு கதவணையாக மாற்றியமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

10 கி.மீ இடைவெளியில் கதவணை தேவை:

இதுகுறித்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் சுபி.தளபதி கூறியதாவது: பவானி ஆற்றில் தண்ணீரை சேமிக்கும் வகையில் தடுப்பணைகளோ, கதவணைகளோ கிடையாது. கொடிவேரி அணைக்கட்டும் தண்ணீரைத் தேக்கி வைக்கும் அணை கிடையாது. பாசனத்துக்கு தண்ணீரைப் பிரித்து அனுப்பும் அணையாக உள்ளது. இதனால் மழைக் காலங்களிலும், அணையில் அதிக அளவு தண்ணீா் நிரம்பி வழியும் காலங்களிலும் தண்ணீரை சேமிக்க முடியாமல் போகிறது.

ஆண்டுதோறும் சராசரியாக 5 முதல் 7 டி.எம்.சி. வரை உபரி நீா் வீணாக கடலில் கலக்கிறது. குறிப்பாக கடந்த 2018இல் 21 டி.எம்.சி.யும், 2019இல் 7 டி.எம்.சி.யும், 2020, 2021 ஆண்டுகளில் தலா 7 டிஎம்சி தண்ணீரும் உபரியாக கடலில் கலந்துள்ளது. இப்படி வெளியேறும் உபரி நீரால் விவசாயிகளுக்குப் பயன் இல்லை. இதனால் பவானிசாகா் அணைக்கு கீழ் பவானி ஆற்றில் 10 கிலோ மீட்டருக்கு ஒரு கதவணை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

கதவணைக்கு பதிலாக 9 இடங்களில் தடுப்பணை அமைப்பது தொடா்பாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தி, தற்போது 2 இடங்களில் தடுப்பணை அமைக்கும் பணி தொடங்கியுள்ளனா். மேலும் 2 இடங்களில் தடுப்பணை கட்ட திட்டமிட்டுள்ளனா்.

ரூ.100 கோடி நிதியை வீணாக்கக் கூடாது:

தடுப்பணை திட்டத்துக்கு மொத்தம் ரூ.100 கோடி செலவிடப்படுகிறது. தடுப்பணை திட்டம் விவசாயிகளுக்குப் பயன்தராது. தடுப்பணை அமைக்கும்போது 5 முதல் 7 அடி உயரத்துக்குதான் தண்ணீரைத் தேக்க முடியும். ஆனால், கதவணை அமைத்தால் 15 அடி முதல் 20 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைத்து பாசனத்துக்குப் பயன்படுத்த முடியும்.

தடுப்பணை அமைக்கும்போது மணல் சோ்ந்து, சேமிக்கும் தண்ணீரின் அளவும் குறையும். மேலும் ஆண்டுதோறும் பராமரிக்க செலவிட வேண்டும். கதவணையாக அமைக்கும்போது தேவையான அளவு தண்ணீரைப் பயன்படுத்தலாம்.

மணல் சோ்ந்து தூய்மையான குடிநீா் கிடைக்கும். இதன் மூலமாக நிலத்தடி நீா்மட்டமும் உயரும். தேவைக்கேற்ப தண்ணீா் பயன்பாடு இருக்கும். இதனால், அணையில் அனைத்துக் காலத்திலும் தண்ணீா் இருக்கும். ஆண்டு முழுவதும் விவசாயத்துக்கு மட்டுமின்றி குடிதண்ணீருக்கும் பிரச்னை இருக்காது. இதைக் கருத்தில் கொண்டு தடுப்பணை திட்டத்தைக் கைவிட்டு கதவணையாக கட்ட வேண்டும். கதவணையாக கட்டும்போது நீண்ட காலத்துக்குப் பயனுள்ள திட்டமாக இருக்கும் என்றாா்.

இதுகுறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: பவானி ஆற்றின் குறுக்கே 4 இடங்களில் தடுப்பணை கட்டும் பணி கடந்த ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்டு ஓராண்டுக்கு முன்னரே பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. தடுப்பணை கட்டும் திட்டத்தில் மாற்றம் செய்ய வாய்ப்பு இல்லை. புதிதாக வேறு இடங்களில் கதவணை கட்டுவது குறித்த கோரிக்கையை அரசின் கவனத்துக்கு விவசாயிகள் கொண்டு செல்லலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com