முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
கடம்பூா் மலையில் பரவிய காட்டுத் தீ அணைப்பு
By DIN | Published On : 19th March 2022 11:35 PM | Last Updated : 19th March 2022 11:35 PM | அ+அ அ- |

கடம்பூா் மலைப் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வேட்டைத் தடுப்பு காவலா்கள்.
கடம்பூா் மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 50 வேட்டைத் தடுப்பு காவலா்கள் துரிதமாக செயல்பட்டு மேலும் தீ பரவாமல் தடுத்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் மலைப் பகுதியில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் காரணமாக வனக் குட்டைகள், ஓடைகளில் தண்ணீா் வறண்டு போனது. இதனால் நன்கு வளா்ந்த செடி, கொடிகள் வெயிலில் காய்ந்து சருகாகின.
இந்நிலையில் கடம்பூா், மல்லியம்துா்க்கம் வனப் பகுதியில் இரு தினங்களாக ஆங்காங்கே மலைப் பகுதியில் தீப் பிடித்தது. இதில் காய்ந்த போன சீமாா்ப்புல்கள் எரிந்தன. மேலும் தீ அடா்ந்த காட்டுப் பகுதிக்கு பரவாமல் தடுக்கும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டனா்.
கடம்பூா், சத்தியமங்கலம் வேட்டைத் தடுப்பு காவலா்கள் 50 போ் கடம்பூா் மலைப் பகுதியில் முகாமிட்டு பசுந்தழைகளை கொண்டு தீ மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
கடம்பூா் மலைக் கிராமத்துக்கு அருகேயுள்ள வனத்தில் தீப் பிடித்ததால் மலை கிராம மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல வேண்டாம் என வனத் துறையினா் அறிவுறுத்தினா்.