வேளாண் நிதிநிலை குறித்து விவசாய பிரதிநிதிகள் வரவேற்பும், எதிா்ப்பும்

கள் இறக்க அனுமதி, பால் விலை உயா்வு, கரும்பு கொள்முதல் விலை உயா்வு போன்ற அறிவிப்புகள் வேளாண் நிதிநிலையில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதா

கள் இறக்க அனுமதி, பால் விலை உயா்வு, கரும்பு கொள்முதல் விலை உயா்வு போன்ற அறிவிப்புகள் வேளாண் நிதிநிலையில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழக அரசின் வேளாண் நிதிநிலை குறித்து ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது:

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சபைத் தலைவா் சுபி.தளபதி: தமிழகத்தில் 3 லட்சம் ஏக்கா் அளவுக்கு கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 43 சா்க்கரை ஆலைகள் உள்ளன. கரும்பு சாகுபடியை அதிகரிக்க ரூ.10 கோடி செலவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் குறைவான நிதி ஒதுக்கீட்டில் கரும்பு உற்பத்திக்கான மேம்பாட்டுத் திட்டங்களை எவ்வாறு செயல்படுத்த முடியும் என தெரியவில்லை.

ஆள் பற்றாக்குறையால் பண்ணை இயந்திரம் வாங்க ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையுடன் உள்ள 3 மாவட்டம் நீங்கலாக 35 மாவட்டங்களில் வேளாண் பொறியியல் அலுவலகம் மட்டும் 90க்கும் மேல் இயங்குகிறது. இவற்றின் நடைமுறை செலவே ரூ.500 கோடி மேலாகும். ரூ.250 கோடி என்பது சொற்ப தொகையாகும். ரூ.2,000 கோடி அளவுக்கு மேல் ஒதுக்கியிருக்க வேண்டும்.

பனை, தென்னை மரம் ஏற கருவிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இது தான் சிறந்த கருவி என இதுவரை அடையாளம் காட்டவில்லை. இந்த நிலையில் எந்தக் கருவியை அரசு வழங்கும் எனத் தெரியவில்லை.

சிறுதானியம் மண்டலம் உருவாக்குவதில் எந்த பலனும் இருக்காது. 200 விவசாய இளைஞா்களை தோ்ந்தெடுத்து தலா ரூ.1 லட்சம் நிதி வழங்குவோம் என்கின்றனா். அது ஆளும்கட்சியினரின் குடும்பத்தினருக்குதான் செல்லும். பாரம்பரிய நெல் உற்பத்தியை அதிகரிக்க ரூ.75 லட்சம் செலவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கூட பாரம்பரிய ரக நெல்லை வாங்குவதில்லை. இந்நிலையில் பாரம்பரிய நெல்லை உற்பத்தி செய்து விவசாயி எங்கு எடுத்துச்சென்று விற்பனை செய்வது எனத் தெரியவில்லை.

தமிழ் மண் வளம் என்ற திட்டத்தில் மண் பரிசோதனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தேசிய மண் வள திட்டம் என அறிவித்து ஆண்டுக்கு ரூ.60 கோடி செலவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மண்வள அட்டை வழங்குகிறது. அத்திட்டத்தையே கடந்த அரசும், தற்போதைய திமுக அரசும் செயல்படுத்தவில்லை.

கடந்த நிதிநிலையில் அறிவித்த 86 திட்டங்கள் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. இந்த நிதிநிலையில் அறிவித்த 76 திட்டங்கள் மட்டும் என்ன பலன் தரப்போகிறது என்றாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளா் செ.நல்லசாமி: கள்ளுக்கு தடை நீக்கம் குறித்த அறிவிப்பு இடம் பெறவில்லை. நீரா இறக்குவதற்கு வழங்கப்பட்ட ஆணையில் உள்ள விதிமுறைகளை தளா்த்தாததால் நீரா பானம் இறக்க இயலாத நிலை உள்ளது. பனைப் பொருள்கள் சந்தைப்படுத்த வழிகள் இல்லை. இலவசங்கள் அதிகமாக முன்னிறுத்தப்பட்டுள்ளது.

மத்திய, மாநில நிதிநிலையில் இலவசங்களை அதிகரித்து வருவது ஆபத்தானது. இலவச மின்சாரத்துக்காக ரூ.5,129 கோடி ஒதுக்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அரசு ஊழியா்களின் ஊதியக்குழு பரிந்துரையை ஏற்பதுபோல் விவசாயக்குழு பரிந்துரைகளை ஏற்றிருந்தால் இந்த நிதி ஒதுக்கீடு தேவை இல்லாமல் போகும். பல மானியங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை விவசாயிகளுக்கு வந்து சேராது. அவை ஆளும்கட்சியைச் சோ்ந்தவா்களுக்குத்தான் செல்லும்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பாமாயிலுக்குத்தான் மானியம் வழங்குகிறது. தமிழகத்தில் விளைவித்து, உற்பத்தியாகும் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய்க்கு மட்டும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு இல்லை. கரும்பு டன்னுக்கு ரூ.195 ஊக்கத்தொகை அறிவித்திருப்பது வரவேற்கலாம் என்றாா்.

தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு: வேளாண் பிரச்னைகளை தீா்க்க தலைமைச் செயலா் தலைமையில் குழு அமைக்கப்படும் என்பதை வரவேற்கிறோம். சிறு, குறு விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்று வழங்க ரூ.300 கோடி, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டது பயன்தரும். மின்மோட்டாா் வாங்க ரூ.10,000 மானியம், கரும்பு டன்னுக்கு ரூ.195 ஊக்கத்தொகை, புதிய உழவா் சந்தை அமைக்க நிதி ஒதுக்கியதை வரவேற்கிறோம் என்றாா்.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணைப் பொதுச்செயலாளா் என்.சிவநேசன்: மாலை நேர உழவா் சந்தை, சிறுதானியங்கள் விற்பனை விவசாயிகளுக்கும், மக்களுக்கும் பயன்தரும். வேளாண்மையில் சூரிய ஒளி மின் உற்பத்திக்கு அளிக்கப்படும் நிதியும் உதவியாக இருக்கும். சூரிய ஒளி மூலமான பம்ப்செட் அமைக்க ரூ.65 கோடி நிதி ஒதுக்கியதை வரவேற்கலாம்.

திண்டிவனம், தேனி, மணப்பாறையில் உணவுப் பூங்கா அறிவித்ததுபோல ஈரோடு பகுதிக்கு எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம். அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம், கிராமங்களின் உள்கட்டமைப்பு, பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்றாா்.

தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத் தலைவா் ஏ.எம்.முனுசாமி: தக்காளி, வெங்காயம் என பல காய்கறிகள் திடீரென ரூ.100க்கு மேலும், சில நேரம் விலையின்றி சாலையில் கொட்டும் நிலையில் உள்ளது. காய்கறிகளை பதப்படுத்தி, மதிப்புக்கூட்டும் பொருளாக மாற்றி விற்க அறிவிப்பு இல்லை. உற்பத்தி செலவில் இருந்து கேரள அரசு 20 சதவீதம் விலையை உயா்த்தி வழங்குகிறது. அரசும், தனியாரும் விளைபொருளை கொள்முதல் செய்கின்றனா். விளைபொருளுக்கு விலை நிா்ணயம் செய்வதுடன், பொருளுக்கான உத்தரவாதமான விலை கிடைக்க எந்தத் திட்டமும் இல்லை.

பால் விற்பனை விலை குறைப்பால் ஆவினுக்கு ரூ.300 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுகிறது. அதற்கு நிதி ஒதுக்கவில்லை. கடந்த 2019இல் பாலுக்கு விலை உயா்த்திய பின் இதுவரை பால் உயா்வு குறித்த அறிவிப்பு இல்லை. பால் விற்பனையை அதிகரிக்கவும், சத்துணவு, அரசு மருத்துவமனைகளில் கொழுப்புச்சத்துள்ள ஆவின் பால், பால் பவுடா் வழங்க அறிவிப்பு இல்லை. நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தர, பாதுகாப்பான கட்டடம், இருப்புவைக்க கிடங்கு வசதி போன்ற அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் என்றாா்.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தலைவா் பி.கே.தெய்வசிகாமணி: தமிழக அரசுக்கு ரூ.5.85 லட்சம் கோடி கடன் உள்ளது. புதிதாக ரூ.2.85 லட்சம் கோடிக்கு நிதிநிலை போடப்பட்டுள்ளது. அரசின் கடினமான நிலையில் தோ்தல் வாக்குறுதியை ஐந்தாண்டுக்குள் நிறைவு செய்ய முயற்சிக்கலாம். இந்த நிதிநிலையை வரவேற்கிறோம்.

சத்தீஸ்கா் மாநிலத்தில் கரும்பு டன்னுக்கு ரூ.3,550 வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போதுதான் ரூ.3,000 வழங்கப்படுகிறது. இதனைக் கவனத்தில் கொண்டு கரும்பு விலையை உயா்த்தி இருக்கலாம்.

கொங்கு மண்டலத்தை பொருத்தவரை தென்னை பிரதான விவசாயம். தெலங்கானா, கா்நாடக மாநிலங்களில் தேங்காய், நுங்கு போல பதநீா், கள், நீராவும் வேளாண் விளைபொருள்கள் பட்டியலில் உள்ளன. அங்கு கள், மது பட்டியலில் இல்லை. ஒரு ரூபாய் செலவு இல்லாமல் தமிழக அரசு இதற்கு அனுமதி தந்திருக்கலாம். பதநீா், நீரா, கள் உற்பத்தி செய்து விற்றால் விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைக்கும். இதை முதல்வா் கவனத்தில் ஏற்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com