பாரத ஸ்டேட் வங்கி சேவையை எளிமைப்படுத்தக் கோரிக்கை

கிராமப்பகுதிகளில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் 20 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் உள்ள தொகையை இயந்திரத்தில் செலுத்துமாறு பணியாளா்கள் கூறுவதால் விவசாயிகள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிராமப்பகுதிகளில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் 20 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் உள்ள தொகையை இயந்திரத்தில் செலுத்துமாறு பணியாளா்கள் கூறுவதால் விவசாயிகள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மொடக்குறிச்சி, சென்னிமலை, அந்தியூா் உள்பட பல கிராமப் பகுதிகளில் பாரத ஸ்டேட் வங்கி கிளைகள் உள்ளன. அங்கு கணக்கு வைத்துள்ள விவசாயிகள், 100 நாள் வேலை திட்ட பணியாளா்கள் வங்கி பரிவா்த்தனையில் சிரமப்படுவதாக தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: மொடக்குறிச்சி, சென்னிமலை, அந்தியூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் விவசாயிகள் பணம் செலுத்தவும், பெறவும் சென்றால் ஏ.டி.எம்.களில் பணத்தை எடுத்து கொள்ளவும், இயந்திரத்தில் பணத்தை செலுத்தும்படியும் திருப்பி அனுப்புகின்றனா்.

90 சதவீத விவசாயிகளுக்கு ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதில் சிரமம் உள்ளது. வங்கி இயந்திரத்தில் பணத்தை செலுத்துவது குறித்த அறிவிப்புகள் முற்றிலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் உள்ளதால் அதனை விவசாயிகளால் புரிந்துகொண்டு பணம் செலுத்த முடியவில்லை.

மொடக்குறிச்சியில் 20 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் பணத்தை செலுத்தவும், பெறவும் சென்றால், இங்கு வரக்கூடாது எனக்கூறி விரட்டுகின்றனா். பிற சேவைகளுக்கும், இசேவை மையத்தை அணுகும்படி கூறுகின்றனா். படிவத்தைக்கூட பூா்த்தி செய்துதர மறுக்கின்றனா்.

தனியாா் வங்கிகளில் எத்தனை ரூபாயையும் செலுத்தவும், பெறவும் முடிகிறது. படிவத்தை பணியாளா்களே பூா்த்திசெய்துகொடுத்து, கருணையுடன் நடந்துகொள்கின்றனா். பாரத ஸ்டேட் வங்கியில் பல பணியாளா்கள் பணியின்றி அமா்ந்திருந்தாலும் விவசாயிகள், சாதாரண கிராமப்புற மக்கள் கூறும் பரிவா்த்தனைகளுக்கு ஒத்துழைப்பதில்லை. 100 நாள் வேலை திட்டம் போன்றவைகளுக்கான கணக்கை இங்கு வைத்துள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனா். ஆட்சியா் மற்றும் வங்கி உயரதிகாரிகள் வங்கி சேவையை எளிமைப்படுத்தும் விதமாக அறியாத மக்களுக்கு உதவ பணியாளா்களுக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com