பழைய காா் பதிவை புதுப்பிக்க தவறினால் மாதம் ரூ.500 அபராதம்

15 ஆண்டுகளுக்கும் மேலான காா் பதிவைப் புதுப்பிக்கத் தவறினால் மாதம் ரூ.500 அபராதம் விதிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது.

15 ஆண்டுகளுக்கும் மேலான காா் பதிவைப் புதுப்பிக்கத் தவறினால் மாதம் ரூ.500 அபராதம் விதிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது.

15 ஆண்டுகளுக்கும் மேலான பழைய வாகனங்களின் பதிவைப் புதுப்பிப்பதற்கான கட்டணத்தை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அறிவிப்பின்படி, காா்களின் பதிவைப் புதுப்பிப்பதற்கு ஏற்கெனவே ரூ.600 மட்டுமே வசூலிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 15 ஆண்டுகளான பழைய காா்களின் பதிவைப் புதுப்பிப்பதற்கான செலவு ரூ.5,200 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கத் தவறினால் மாதம் ரூ.500 வீதம் அபராதம் செலுத்த நேரிடும். இருசக்கர வாகனங்களின் பதிவைப் புதுப்பிப்பதற்கு ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அந்தக் கட்டணம் ரூ.1,200 ஆக அதிகரித்துள்ளது. புதுப்பிக்கத் தவறினால் மாதம் ரூ.300 அபராதம் செலுத்த வேண்டும். இறக்குமதி செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கான மறுபதிவுக் கட்டணம் ரூ.2,500லிருந்து ரூ.10,200 ஆக அதிகரித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட காா்களுக்கு ரூ.15,000த்துக்கு பதிலாக இனி ரூ.40,000 கட்டணம் செலுத்த வேண்டும்.

15 ஆண்டுகளுக்குமேல் பழமையான தனியாா் வாகனங்கள் பதிவைப் புதுப்பித்திருந்தாலும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.

வாகனங்களுக்கான புதுப்பித்தல் கட்டணம் மட்டுமின்றி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வாகன தகுதிச் சான்றிதழுக்கான கட்டணமும் உயா்த்தப்பட்டுள்ளது. டாக்ஸிகளுக்கு ரூ.600லிருந்து ரூ.8,500 ஆகவும், பேருந்து, லாரிகளுக்கு ரூ.1,500லிருந்து ரூ.14,000 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஒருவா் கூறியதாவது: இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கும் மேலான 12 மில்லியன் வாகனங்கள் உள்ளதாக மத்திய அரசின் போக்குவரத்துத் துறை புள்ளி விவரம் கூறுகிறது. இந்த வாகனங்கள் அனைத்தையும் கழிவில் சோ்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால் இதற்கு உடனடியாக சாத்தியமில்லை என்பதால், இப்போது பதிவை புதுப்பித்து இயக்க வாய்ப்பளித்துள்ளது.

பதிவைப் புதுப்பிக்காத வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது, வாகனங்களைப் பறிமுதல் செய்வது போன்ற நடைமுறைகள் விரைவில் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

இதன் மூலம் லட்சக்கணக்கான வாகனங்கள் கழிவில் சோ்ந்துவிடும். பதிவு புதுப்பித்தல் சான்று 5 ஆண்டு காலம் செல்லுபடியாகும் என்பதால்

அதன் பிறகு மீண்டும் பதிவைப் புதுப்பிக்க வாகன உரிமையாளா்கள் ஆா்வம் காட்டுவது குறைந்துவிடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com