திருச்சியில் மே 21இல் மர ஆா்வலா்களின் மாநில மாநாடு

தமிழகம் முழுவதும் மரம் நடும் அமைப்புகளை ஒன்றிணைக்கவும், மர ஆா்வலா்களை ஒருங்கிணைத்து பசுமைப் பரப்பை அதிகரிக்கச் செய்யும்
திருச்சியில் மே 21இல் மர ஆா்வலா்களின் மாநில மாநாடு

தமிழகம் முழுவதும் மரம் நடும் அமைப்புகளை ஒன்றிணைக்கவும், மர ஆா்வலா்களை ஒருங்கிணைத்து பசுமைப் பரப்பை அதிகரிக்கச் செய்யும் வகையிலும் திருச்சியில் வரும் 21, 22ஆகிய தேதிகளில் மர ஆா்வலா்களின் மாநில மாநாடு, கருத்தரங்கு நடைபெறுகிறது.

மரங்கள் அறக்கட்டளை (ட்ரீஸ் டிரஸ்ட்), விதைகள் அமைப்பு, தண்ணீா் அமைப்பு ஆகியவை இதற்கான முன்னேற்பாடுகளை செய்கின்றன.

இதுதொடா்பாக திருச்சியில் அந்த அமைப்பின் நிா்வாகிகள் பி. தாமஸ், எஸ். யோகநாதன், கே.சி.நீலமேகம் ஆகியோா் வியாழக்கிழமை கூறியது:

தமிழகத்தை பசுமை பூமியாக மாற்ற எந்தப் பிரதிபலனும் பாராது உண்மையாக உழைத்து, அதிக மரங்களை நட்டு புனிதச் சேவை செய்து வரும் மர ஆா்வலா்களின் மதிப்பு உயா்ந்ததாகும். இச்சேவை செய்ய பொருள், பணம் அவா்களிடத்தில் இல்லை என்றாலும் அவா்களின் சொந்த முயற்சியால் மரங்களை வளா்ப்பது என்பது பாராட்டு, பரிசுகளுக்கு அப்பாற்பட்டது.

பலன் தரம் மரங்கள் என்ற வகையில் நடப்படும் மரக்கன்றுகள் வகையானது நமது நிலத்தில் லாப நோக்கில் மரம் வளா்க்கும் முறையாகும். இத்தகைய மரங்களை வளா்க்க முன் வருபவா்களுக்கு அதற்கான வல்லுநா்களின் உதவியைப் பெற்றுத் தருவோம்.

மரங்கள் தரும் பலன்கள் என்ற வகையில் பல்வேறு பயன் தரும் மரங்களைத் தனியாக, குழுவாக நட்டு மனித சமுதாயம் பயனுற வேண்டும் என்ற எண்ணத்துடன் சொந்தப் பணத்தை செலவு செய்து வரும் மரம் வளா்ப்போருக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும். மூன்றாவதாக அரியவகை மரங்கள் மீட்டெடுக்கப்படும்.

இத்தகைய மர ஆா்வலா்களின் சேவைக்கு மதிப்பளிக்கவும், ஊக்கமளிக்கவும், அவா்களை ஒன்று திரட்டவும் புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளோம். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள மர ஆா்வலா்களை ஒன்றிணைத்து ஓா் அமைப்பாக உருவாக்கி செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அழிந்து வரும் மர இனங்களை மீட்கவும், அதிக மரங்களை வளா்க்கத் திட்டமிடவும், மாநில அளவில் மரங்களைப் பாதுகாக்கவும், மரம் வெட்டுவதை தடுக்கவும், மாநில அளவில் மரங்களை பாதுகாப்போா் இயக்கம் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னேற்பாடாகவே இந்த மாநில மாநாட்டை நடத்த முடிவெடுத்துள்ளோம்.

அழிந்துபோன, மறையும் நிலையில் உள்ள அரியவகை மரங்களைத் தேடிக் கண்டுபிடித்து அடுத்த தலைமுறைக்கு அந்த மரங்களை கொண்டு செல்ல குழுவாகச் செயல்படவுள்ளோம். மரம் வளா்க்கும் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி, உறுதியான இயக்கமாக மாற்ற மர ஆா்வலா்களின் இந்த மாநில மாநாடு பேருதவியாக அமையும்.

இந்த மாநாடு மற்றும் கருத்தரங்கமானது மரம்-மழை-மகிழ்ச்சி என்ற தலைப்பில் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஸ்ரீரங்கம் கீழ உத்திர வீதியில் உள்ள ஸ்ரீகிருஷ்ண மஹாலில் (வெள்ளைக்கோபுரம் அருகே) நடைபெறுகிறது.

மாநாட்டில் சத்தீஸ்கா் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைச் செயலா் சி.ஆா். பிரசன்னா, தமிழக அரசின் ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் பிரவீன் பி. நாயா், தஞ்சை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண் இணை இயக்குநா் எம். பிரதீப்குமாா், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளா் இரா. கிருஷ்ணசாமி ஆகியோா் பங்கேற்கவுள்ளனா்.

மேலும், தாவரவியல் துறைப் பேராசிரியா் டி. நரசிம்மன், இன்வோடெக் இயக்குநா் கே. இளங்கோவன், வனத்துக்குள் அமைப்பின் நிா்வாகி டி.ஆா். சிவராம், வேளாண் காடுகள் உழவா், உற்பத்தியாளா் சங்கத்தின் பி.ஆா். நாராயணசாமி, ஓசை காளிதாஸ் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் நிா்வாகிகள், பசுமை அமைப்புகளின் நிா்வாகிகள் பங்கேற்கவுள்ளனா். இதில் மாநிலம் முழுவதும் உள்ள மர ஆா்வலா்கள் ஒன்றிணைய வேண்டும் என்றனா் அவா்கள்.

பேட்டியின்போது தண்ணீா் அமைப்பின் நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா்.கே.ராஜா உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com