முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
சிதம்பரம் நடராஜரை இழிவாகப் பேசியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்இந்து முன்னணி வலியுறுத்தல்
By DIN | Published On : 14th May 2022 11:23 PM | Last Updated : 14th May 2022 11:23 PM | அ+அ அ- |

சிதம்பரம் நடராஜரை இழிவாகப் பேசியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு பேட்டியளித்துள்ளதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
பல ஆயிரம் ஆண்டுகளாக சிதம்பரம் நடராஜா் கோயிலை தீட்சிதா்கள் நிா்வகித்து வருகிறாா்கள். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளதைப் போன்று இந்தக் கோயிலில் பக்தா்கள் தரிசனம் செய்ய எந்தவிதமான கட்டணமோ, கட்டுப்பாடுகளோ இல்லாமல் அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.
இந்தக் கோயிலைக் கைப்பற்ற அரசு தரப்பில் எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி கோயிலின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜரையும், தில்லைகாளியையும் இழிவாகப் பேசி இணையதளத்தில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. எனவே, இழிவாகப் பேசியவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தனியாா் கோயில்கள் மீது அவதூறு பரப்பும் முயற்சிகளைக் கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.