முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
லாட்டரியால் ரூ.62 லட்சம் பணம் இழப்பு: ஈரோட்டில் நூல் வியாபாரி தற்கொலை
By DIN | Published On : 14th May 2022 11:56 AM | Last Updated : 14th May 2022 11:56 AM | அ+அ அ- |

ஈரோடு: ஈரோட்டில் திமுக பிரமுகரிடம் லாட்டரி வாங்கி ரூ.62 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த நூல் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு எல்லப்பாளையம் முல்லை நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(56). இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மகள் நித்யா ஆனந்தி திருமணமாகி குமாரபாளையத்தில் கணவருடன் வசித்து வருகிறார். கணவனை இழந்த மற்றொரு மகள் திவ்யபாரதி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
ஆரம்ப காலத்தில் ராதாகிருஷ்ணன் தறிபட்டறை நடத்தி வந்துள்ளார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் பின்னர் நூல் கமிஷன் ஏஜண்டாக வேலை பார்த்து வந்துள்ளார்..
ராதாகிருஷ்ணனுக்கு அதிகளவு லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்துள்ளது.
ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த 39 வது வார்டு திமுக கவுன்சிலர் கீதாஞ்சலி என்பவரின் கணவர் செந்தில் குமாரிடம் லாட்டரி வாங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை உருக்கமான வீடியோ ஒன்றை கைப்பேசியில் பதிவிட்டு நண்பர்களுக்கு அனுப்பிய ராதாகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில் கருங்கல்பாளையத்தை சேர்ந்த கவுன்சிலர் கீதாஞ்சலியின் கணவர் செந்தில்குமாரிடம் லாட்டரி வாங்கி 62 லட்சம் ரூபாய் இழந்ததாகவும், உயிருடன் இருந்தால் இன்னும் பணத்தை இழந்து விடுவேன் என தெரிவித்துள்ளார்.
பல குடும்பங்கள் லாட்டரியால் பாதிக்கப்படுவதால் ஈரோட்டில் லாட்டரி விற்பனையை தடுக்கவும் வலியுறுத்தி உள்ளார். ராதாகிருஷ்ணன் மனைவி மாலதி அளித்த புகாரின் பேரில் ஈரோடு வடக்கு காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரியை ஈரோட்டில் திமுக பிரமுகர் பகிரங்கமாக விற்பனை செய்து வருவது இதன் மூலம் அம்பலமாகி உள்ளது.
பலரது வாழ்க்கையை சிதைக்கும் லாட்டரி விற்பனைக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் லாட்டரி விற்பனை தொடர்ந்து கொண்ட இருந்த நிலையில், பலரும் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்.
இந்நிலையில்தான் லாட்டரியால் பணத்தை இழந்த ஈரோட்டில் நூல் வியாபாரி தற்கொலை செய்து கொண்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.