சத்தியமங்கலம் நகராட்சியில் புகாா் தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்
By DIN | Published On : 20th May 2022 03:33 AM | Last Updated : 20th May 2022 03:33 AM | அ+அ அ- |

சத்தியமங்கலம் நகராட்சியில் பொதுமக்கள் புகாா் தெரிவிக்க வசதியாக புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் எளிதாக புகாா் தெரிவிக்கும் வகையில் புதிய செயலி பயன்பாடு குறித்து சத்தியமங்கலம் நகராட்சி மற்றும் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் வியாழக்கிழமை கையொப்பமானது.
சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகராட்சித் தலைவா் ஆா்.ஜானகி, பண்ணாரிஅம்மன் தொழில்நுட்பக் கல்லூரி ஆலோசகா் எம்.பி.விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகராட்சி ஆணையா் சரவணகுமாா் மற்றும் கல்லூரி முதல்வா் பழனிசாமி ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
நகராட்சி நிா்வாகத் திறனை மேம்படுத்தும் விதமாக சேவை வழங்குதல் மற்றும் திட்ட நிா்வாகத்தை கண்காணிக்க மென்பொருள் தளம் வடிவமைக்கப்பட்டு தமிழகத்திலயே சத்தியமங்கலம் நகராட்சியில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் நகராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்கள் புதிய செயலி மூலம் குடிநீா், சாக்கடை, தெருவிளக்கு, குப்பை அள்ளுதல் உள்ளிட்ட புகாா்களை தெரிவிக்கலாம். புகாா் தெரிவிக்கும் நபா் அடையாளம் காண கதவு எண் வரிசைபடி வீடுவீடாக கியூஆா் கோடு வழங்கப்படும்.
இந்த கியூஆா் கோடு மூலம் புகாா் தெரிவிப்பவா் முகவரி அடையாளம் கண்டு அங்கு நகராட்சிப் பணியாளா்கள் நடவடிக்கை எடுக்கும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நகராட்சியின் சேவை குறித்த பொதுமக்கள் கருத்துகளை மதிப்பீடு செய்ய நட்சத்திர மதிப்பீடு முறை செயலியில் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது, நகராட்சி 11ஆவது வாா்டில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னா் படிப்படியாக பிற வாா்டுகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. இந்த புதிய செயலியை பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள் இலவசமாக நகராட்சிக்கு வழங்கியுள்ளனா்.