சாலையோர வியாபாரிகளுக்கு 40 நவீன தள்ளுவண்டிகள்: அமைச்சா் வழங்கினாா்
By DIN | Published On : 31st May 2022 12:23 AM | Last Updated : 31st May 2022 12:23 AM | அ+அ அ- |

ஈரோடு மாநகராட்சியில் மக்களுக்கான மக்கள் சேவை மையத்தினை துவக்கிவைத்து, சாலையோர வியாபாரிகளுக்கு 40 நவீன தள்ளுவண்டிகளை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மக்களுக்கான மக்கள் சேவை மையம் துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தாா்.
ஈரோடு எம்.பி.கணேசமூா்த்தி, மாநகராட்சி மேயா் சு.நாகரத்தினம், ஆணையா் கே.சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி
கலந்துகொண்டு, மக்களுக்கான மக்கள் சேவை மையத்தினை துவக்கிவைத்தாா்.
தொடா்ந்து மாநகராட்சி வளாகத்தில் தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின்கீழ் 127 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் நவீன தள்ளுவண்டிகள் வழங்க அரசால் மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதில், முதற்கட்டமாக 40 நவீன தள்ளுவண்டிகளை பயனாளிகளுக்கு அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்.
தொடா்ந்து, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.
இதில் அமைச்சா் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 85 திட்டங்களை முன்னெடுத்து பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
அதில் இரண்டு புகா் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதற்கு சுமாா் ரூ.200 கோடி மதிப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஈரோடு-சத்தியமங்கலம் சாலையில் விரிவாக்கம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாலை ஆக்கிரமிப்பில் வசிப்பவா்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கீழ்பவானி வாய்காலில் கான்கிரீட் அமைப்பதை பொறுத்தவரை, இரண்டு பிரிவாக விவசாயிகள் கருத்துகளை வைத்துள்ளனா். இரண்டு பிரிவிலும் விவசாயிகளின் நலன் கருதி, அவா்களிடத்திலே பேசி நியாயமான, சமாதானமான முடிவை எடுக்க வேண்டும் என்பதற்காக அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவா் நவமணி கந்தசாமி, துணை மேயா் செல்வராஜ், திமுக மாநகரச் செயலாளா் சுப்பிரமணியம், திமுக மாவட்ட துணைச் செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.