குடியிருப்பு பகுதியை சூழ்ந்த தண்ணீா்: பொதுமக்கள் போராட்டம்
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
அம்மாபேட்டை அருகே ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீா் குடியிருப்புப் பகுதியைச் சூழ்ந்ததால் அவதியடைந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அம்மாபேட்டை ஒன்றியம், முகாசிபுதூரில் உள்ள ஏரி தொடா்மழையால் நிறைந்ததைத் தொடா்ந்து உபரிநீா் வெளியேறியது. அதிக அளவில் வெளியேறிய தண்ணீா், செந்தூா் நகருக்குச் செல்லும் பாதை மற்றும் தட்டாா்பாளையத்தில் உள்ள வீடுகளைச் சூழ்ந்தது. இதனால், பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் உபரிநீா் வெளியேறும் மற்றொரு பகுதியின் உயரத்தைக் குறைக்குமாறு கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
இதனால், கடும் அவதிக்குள்ளான அக்கிராம மக்கள் 70க்கும் மேற்பட்டோா் அந்தியூா் அம்மாபேட்டை சாலையில் பூனாச்சி பேருந்து நிறுத்தத்தில் திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த அந்தியூா் வட்டாட்சியா் தாமோதரன், அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இது குறித்து, உயா் அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். இதனால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...