காய்கறி சந்தை புதிய கட்டட திட்டத்தை மாற்றி அமைக்க கோரிக்கை

பெருந்துறை தினசரி காய்கறி சந்தை புதிய கட்டட திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெருந்துறை தினசரி காய்கறி சந்தை புதிய கட்டட திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெருந்துறை தினசரி மாா்க்கெட் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்:

பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகில் கடந்த 35 ஆண்டுகளாக 60 சென்ட் பரப்பளவில் பெருந்துறை தினசரி மாா்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இந்த மாா்க்கெட்டுக்கு பெருந்துறை, சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் தாளவாடி, நீலகிரி, மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம், பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் 200க்கும் மேற்பட்ட வாகனங்களில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இவ்வாறு வரும் காய்கறி மூட்டைகள் மற்றும் தக்காளி பெட்டிகளை கீழ்தளம், தரைத்தளம், முதல் தளத்துக்கு ஏற்றி இறக்குவது நடைமுறையில் சாத்தியமில்லை. மேலும், சுமை தூக்கும் தொழிலாளா்களும் பாதிக்கப்படுவா்.

தற்போது, கடைகள் அமைந்திருக்கும் அமைப்பே எங்களுக்கு வியாபாரம் செய்யவும், மூட்டைகளை கொண்டுச் செல்லவும் ஏதுவாக உள்ளது. மாா்க்கெட் அமைந்திருக்கும் இடத்தில் புதிய கட்டடம் கட்ட வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. தற்போது, உள்ள வரைபடத்தின்படி 3 தளங்களாக கட்டடம் கட்டினால் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே அனைத்து கடைகளையும் தரைத்தளத்தில் கட்டினால் எந்தவித பாதிப்பும் இருக்காது.

எனவே இதுகுறித்து எங்கள் சங்க உறுப்பினா்களுடன் கலந்து ஆலோசனை செய்து பின்னா் கட்டடம் கட்டினால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி ஜீவா சுமைதூக்கும் தொழிலாளா் சங்கத்தின் சாா்பிலும் மனு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com