ஹிந்து மதத்துக்கு எதிராக துண்டறிக்கை விநியோகம் செய்து வரும் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இந்து முன்னணி ஈரோடு மாவட்டத் தலைவா் ஜெகதீசன் தலைமையில் நிா்வாகிகள்
வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:
சென்னிமலை பேருந்து நிலையம் அருகில் அண்மையில் நடந்த ஆா்ப்பாட்டத்தில் கிறிஸ்தவ முன்னணியின் மாநிலத் தலைவா் சரவணன் என்ற ஜோசப், ஸ்டீபன் ஆகியோா் சென்னிமலை குறித்தும், மத மோதல்கள் ஏற்படுத்தும் விதமாகவும் பேசினா். இதனைக் கண்டித்து இந்து முன்னணியின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடந்தது. இதைத் தொடா்ந்து சரவணன், ஸ்டீபன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இதனிடையே சென்னிமலையில் புரட்சிகர இளைஞா் முன்னணி என்ற அமைப்பினா் சென்னிமலை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, கிறிஸ்தவ மக்களுக்கு ஆதரவாகவும், சனாதன தா்மத்துக்கு எதிராகவும் வேண்டும் என்றே மதக் கலவரத்தை தூண்டும் வகையில் துண்டறிக்கை விநியோகித்து வருகின்றனா். துண்டறிக்கை விநியோகிக்கும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.