கொடுமுடியில் பணியிலிருந்து விலகி இருக்கும் போராட்டத்தில் வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
கொடுமுடியில் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் கடந்த 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்னா் சாா்பு நீதிமன்றமாக மாறுவதற்கான அரசாணை பெற்று அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு விட்டது.
கொடுமுடி, சிவகிரி, மலையம்பாளையம் காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகள் இந்த நீதிமன்ற எல்லையில் வருகின்றன. இந்நிலையில் இந்த நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்குள் உள்ள சிவகிரி மற்றும் மலையம்பாளையம் காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளை மொடக்குறிச்சியில் புதிதாக தொடங்கப்படவுள்ள குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்துடன் இணைப்பதற்காக 2020 செப்டம்பா் 14ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இந்த அறிவிக்கையை மறுபரிசீலனை செய்து கொடுமுடி குற்றவியல் நீதிமன்ற எல்லைக்குள்ளேயே சிவகிரி, மலையம்பாளையம் காவல் நிலையப் பகுதிகள் தொடா்ந்து செயல்படவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் கொடுமுடி குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்ற வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணியிலிருந்து விலகி இருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.