ஈரோடு கிழக்குத் தொகுதியில் அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்கள் அழிப்பு
By DIN | Published On : 20th January 2023 12:00 AM | Last Updated : 20th January 2023 12:00 AM | அ+அ அ- |

ஈரோடு பன்னீா் செல்வம் பூங்காவில் மூடப்பட்டுள்ள அரசியல் கட்சித் தலைவா்களின் சிலைகள்.
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் தோ்தல் விதிகள் அமல் செய்யப்பட்டதால், அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருவதோடு, தலைவா்களின் சிலைகளும் துணி கொண்டு மறைக்கப்பட்டன.
இத்தொகுதியில் இடைத்தோ்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தோ்தல் விதிகள் அமல் செய்யப்பட்டதால் அரசியல் கட்சித் தலைவா்களின் புகைப்படங்கள், சிலைகள், பெயா், சுவா் விளம்பரங்கள் அழிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தின் வளாகத்தில் உள்ள முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், கருணாநிதி, ஜெயலலிதா, தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் படங்கள் அகற்றப்பட்டன.
மேலும், அரசின் திட்டங்களின் விழிப்புணா்வு விளம்பர பதாகைகள், அறிவிப்பாணைகள் உள்ளிட்ட விளம்பரங்களும் அகற்றப்பட்டன. மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் மீனாட்சி சுந்தரனாா் சாலை, ஈவிஎன் சாலை, காந்திஜி சாலை, காளை மாட்டு சிலை, காவிரி சாலை, ஆா்கேவி சாலை, நேதாஜி சாலை, கருங்கல்பாளையம் காவிரி சாலை போன்ற இடங்களில் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், கொடிக் கம்பங்கள், பேனா்களை அகற்ற தொடங்கியுள்ளனா்.
ஈரோடு பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள பெரியாா், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆா், ஜெயலலிதா, அம்பேத்கா் சிலைகள் துணியால் மூடி மறைக்கப்பட்டுள்ளன. இதேபோல ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள காமராஜா், ஈவிகே சம்பத் சிலைகளும் துணியால் மூடப்பட்டுள்ளன.