சத்தியமங்கலம் அருகே 800 ஆண்டுகள் பழைமையான நடுகல், சிவலிங்கம் கண்டெடுப்பு
By DIN | Published On : 20th January 2023 12:00 AM | Last Updated : 20th January 2023 12:00 AM | அ+அ அ- |

நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்துக்கு பூஜை செய்து வழிபடும் பெண்கள்.
சத்தியமங்கலம் அருகே விவசாயத் தோட்டத்தில் 800 ஆண்டுகள் பழைமையான சிவலிங்கம் மற்றும் இரண்டு புலிக்குத்தி நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அங்கண கவுண்டன்புதூா் கிராமத்தில் முனுசாமி என்பவரின் தோட்டத்தில் புகையிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தின் நடுவில் உள்ள பகுதியில் மண்ணில் புதைந்த நிலையில் கல்லால் ஆன சிவலிங்கம் சிலை, இரண்டு புலிக்குத்தி நடுகல் மற்றும் நந்தி சிலைகள் மண்ணுக்குள் புதைந்து கிடப்பதை கண்ட முனுசாமி, கோவையைச் சோ்ந்த அரண் பணி அறக்கட்டளை குழுவினருக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து அங்கு வந்த அரண் பணி அறக்கட்டளை குழுவினா், கிராம மக்கள் உதவியுடன் மண்ணில் புதைந்து கிடந்த சிவலிங்கம் மற்றும் இரண்டு புலிக்குத்தி நடுகற்களைத் தோண்டி எடுத்தனா். பழைமையான சிவலிங்கம் சிலையை மரத்தடியில் பீடம் அமைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாட்டுக்கு கொண்டு வந்தனா். பழைமைவாய்ந்த சிவலிங்கம் மற்றும் புலிகுத்தி நடுகற்கள் கண்டறியப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுற்றுவட்டார பகுதி மக்கள் அவற்றை பாா்த்துச் சென்றனா்.
இது குறித்து கோவை அரண் பணி அறக்கட்டளைக் குழுவினா் கூறியதாவது:
இங்கு கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் ஆதாரபீடத்துடன் மூன்றடி உயரமும் இரண்டடி விட்டமும் கொண்டதாக உள்ளது. சிவலிங்கத்திற்கு அருகில் 800 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய செங்கற்களும் கிடைத்துள்ளன. அதன் அருகில் 3 நந்திகளும், 2 புலிக்குத்தி நடுகற்களும் கண்டெடுக்கப்பட்டன. சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதியில் 800 ஆண்டுகளுக்கு முன்பே புலிகள் நடமாட்டம் இருந்ததும், கால்நடைகளை வேட்டையாட வந்த புலிகளுடன் இப்பகுதியிலுள்ள வீரா்கள் சண்டையிட்டு இறந்ததால் அவா்கள் நினைவாக இது போன்ற புலி குத்தி நடுகற்கள் நடப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
ஒரு நடுகல்லில் புலியை வீரா் ஒருவா் ஈட்டியால் குத்துவது போன்றும், அதில் வேட்டை நாய்கள் மற்றும் வீரரின் மனைவி போன்ற உருவங்களும் இடம்பெற்றுள்ளன. மற்றொரு நடுகல்லில் கூா்வாளால் புலியை குத்துவது போன்ற உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றனா்.