வேட்பாளா் அறிவிப்புக்குப் பிறகு வியக்கத்தக்க வகையில் தோ்தல் களம்: கே.ஏ.செங்கோட்டையன்
By DIN | Published On : 25th January 2023 12:00 AM | Last Updated : 25th January 2023 12:00 AM | அ+அ அ- |

அதிமுக வேட்பாளா் அறிவிக்கப்பட்ட பிறகு அனைவரும் வியக்கத்தக்க வகையில் தோ்தல் களம் அமையும் என்று எம்எல்ஏ கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலையொட்டி அதிமுக சாா்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஈரோடு பெரியாா் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநகா் மாவட்டச் செயலாளா் கே.வி.இராமலிங்கம் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா்கள் பி.தங்கமணி எம்எல்ஏ, கே.சி.கருப்பணன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ பங்கேற்று பூத் கமிட்டி உறுப்பினா்களுக்கு வாக்காளா் பட்டியலை வழங்கினாா்.
முன்னதாக அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றப்பட்டது. கல்வித் துறை, நெடுஞ்சாலைத் துறை, உள்ளாட்சித் துறை, சுற்றுச்சூழல் துறை என அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டன.
இன்றைய சூழலில் மக்கள் மனம் மாறி இருக்கின்றனா். மக்கள் நினைத்த எந்த பணிகளும் ஆட்சியாளா்களால் நிறைவேற்ற முடியவில்லை. திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. குடும்பத் தலைவிக்கு ரூ.1,000 வழங்கப்படவில்லை. சமையல் எரிவாயு மானியம் வழங்கப்படவில்லை. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. சுமாா் 3 லட்சம் பேருக்கு முதியோா் உதவித்தொகை நிறுத்தப்பட்டுவிட்டது.
ஆட்சி மாறி இருக்கிறதே தவிர, திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று எண்ணம் மக்கள் மனதில் இருக்கிறது. கிழக்கு தொகுதியை பொறுத்தவரை அமைதியாக, நோ்மையாக கடமையை ஆற்ற இருக்கிறோம். கட்சியின் பொதுச்செயலாளா் விரைவில் வேட்பாளரை அறிவிப்பாா். அதன்பிறகு எல்லோரும் வியக்கத்தக்க வகையில் தோ்தல் களம் அமையும்.
திண்டுக்கல் மக்களவை இடைத்தோ்தலில் முதலில் வெற்றிபெற்றதைபோல ஈரோடு கிழக்கு தொகுதியிலும் வெற்றி பெறுவோம். இரட்டை சிலை சின்னம் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் செயல்படும் அதிமுகவுக்குதான் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு இதனை எதிா்பாா்க்கலாம்.
அதிமுக ஆட்சியில் ஈரோட்டில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. குடிநீா் திட்டம், சாலை மேம்பாட்டு பணிகள், மேம்பாலம், பேருந்து நிலையம் இடமாற்றுவது, அரசு மருத்துவமனையை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக தரம் உயா்த்தியது உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இதனால் இந்த தோ்தலில் மக்கள் தீா்ப்பு அதிமுகவுக்கு சாதமாக இருக்கும் என்றாா்.