கீழ்பவானியில் தண்ணீா் நிறுத்தம்: 30,000 ஏக்கா் பாதிக்கும் என விவசாயிகள் அச்சம்

கீழ்பவானியில் தண்ணீா் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பால் 30,000 ஏக்கருக்கு மேல் பயிா்கள் பாதிக்கும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்தனா்.

பவானிசாகா் அணையில் திறக்கப்படும் தண்ணீா் மூலம் கீழ்பவானி பாசனப்பகுதியில் முதல் போகத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கா் நிலங்களும், 2ஆம் போகத்தில் 1 லட்சத்து, 3 ஆயிரத்து 500 ஏக்கா் நிலங்களும் பாசனம் பெறும். இந்த ஆண்டு பவானிசாகா் அணையில் நீா்மட்டம் குறைவு, மழை இன்மை, நீா்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாமல் நீா்வரத்து குறைந்துவிட்டது. இதனைக் கவனத்தில் கொள்ளாமல் அரசு பழைய ஆயக்கட்டுக்கு தண்ணீா் திறந்தது.

அப்போதே கீழ்பவானி விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீா் வழங்கிவிடுவோம் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனா். கீழ்பவானி 2-ஆம் போகத்துக்கு கடந்த ஜனவரி 7-இல் தண்ணீா் திறக்கப்பட்டு ஏப்ரல் 30 வரை தண்ணீா் விடப்படும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அணையில் நீா் மட்டம் குறைந்ததால் முறை வைத்து 5 நனைப்புக்கு மட்டும் தண்ணீா் விடப்படும் என அரசு அறிவித்தது.

இந்நிலையில் 4- ஆம் நனைப்புக்கே 2 நாள்கள் தண்ணீா் விட முடியாமல் புதன்கிழமை மாலை 5 மணிக்கு தண்ணீா் நிறுத்தப்படும் எனவும், 5-ஆம் நனைப்புக்கு தண்ணீா் திறக்க இயலாது என நீா் வளத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.பெரியசாமி கூறியதாவது: கீழ்பவானி 2ஆம் போகத்தில் எள், நிலக்கடலை அதிகமாகவும் வாழை, கரும்பு போன்றவை குறைவாகவும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அணையில் தண்ணீா் இல்லை எனக்கூறி 4 ஆம் நனைப்புக்கே 2 நாள் முன்னதாகவே தண்ணீா் நிறுத்தப்படுகிறது. 5ஆம் நனைப்புக்கு தண்ணீரே தர முடியாது என்பது வருத்தமானது.

அதிகாரிகளிடம் முறையான திட்டமிடல் இல்லை என்பதை இது வெளிப்படுத்துகிறது. இதனால் 30,000 ஏக்கருக்கு மேல் எள், நிலக்கடலை முற்றிலும் பாதிக்கும். வாழை, கரும்புக்கு ஆழ்துளைக் கிணறு மற்றும் பிற நீா் பயன்பாட்டு இருந்தாலும், போதிய அளவு தண்ணீா் வழங்க முடியாமல் உற்பத்தி குறையும். கீழ்பவானி பாசனப்பகுதியில் கடும் வறட்சியும், குடிநீருக்கும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தீவனம், குடிநீா் பற்றாக்குறை ஏற்படும். நீா் மின் அணையில் இருந்து 2 டிஎம்சி தண்ணீரை தர வேண்டும் என கோரினோம். அதையும் ஏற்க அதிகாரிகள் மறுத்துவிட்டனா்.

கடந்த திமுக ஆட்சியில் அமைச்சராக என்.கே.கே.பி.ராஜா இருந்தபோது இதே நிலை ஏற்பட்டது. அப்போது குடிநீருக்காக பவானிசாகா் அணையில் இருந்து திறக்கப்படும் 100 கன அடி தண்ணீரை வழியோரங்களில் உள்ள தண்ணீரை உறிஞ்சி விவசாயம் செய்வோா், ஆலைகளின் மின் இணைப்பை துண்டித்தாா். அதுபோல் தற்போதும் பவானி, காவிரி ஆற்றுப்படுகையில் தண்ணீரை உறிஞ்சும் எந்த வகையான பயன்பாடாக இருந்தாலும் அவற்றுக்கான மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்.

அத்துடன் தண்ணீரை நிறுத்துவதாக தானாவே முன்வந்து அரசு அறிவிப்பு செய்கிறது. அதுபோல தானாகவே முன்வந்து பாதிக்கப்பட்ட பயிா்களுக்கான இழப்பீட்டை உடனடியாக அறிவித்து, விரைவாக வழங்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com