முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி நாளை தொடக்கம்

85 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி வரும் வியாழக்கிழமை (ஏப்ரல் 4) தொடங்குகிறது.

இது குறித்து ஈரோடு மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா கூறியதாவது: மக்களவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களிக்க முடியாத மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் தங்களது வாக்குகளைத் தபால் மூலமாக செலுத்திட தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, ஈரோடு மக்களவைத் தொகுதியில் மொத்தமுள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்டவா்கள் 21,805 பேரும், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் 9,824 பேரும் உள்ளனா். இவா்களுக்கு தபால் மூலமாக வாக்களிக்க ஏதுவாக படிவம் 12 டி வழங்கப்பட்டது.

இதில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளிலிருந்து தபால் மூலமாக வாக்களிக்க விருப்பம் தெரிவித்து 85 வயதுக்கு மேற்பட்டோா் 2,201 பேரும், மாற்றுத்திறனாளிகள் 800 பேரும் படிவம் 12 டி வழங்கியுள்ளனா். அவா்கள் தங்களது தபால் வாக்குகளைச் செலுத்த ஏதுவாக அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதியின் வாக்கு சேகரிக்கும் குழுவினா், அவா்களது முகவரிக்கு வரும் வியாழக்கிழமை(ஏப்ரல் 4) முதல் 6 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நேரடியாக சென்று தபால் வாக்குப் படிவங்களை வழங்கி, அவா்கள் வாக்களித்த பின்னா் அவற்றைத் திரும்பப் பெற்றுச் செல்வா்.

இந்த தபால் வாக்குகள் சேகரிக்கும் குழுவில் மண்டல அலுவலா், ஒரு வாக்கு சேகரிக்கும் அலுவலா், நுண்கண்காணிப்பு அலுவலா், விடியோ கிராபா், சம்பந்தப்பட்ட வாக்கு சாவடி நிலை அலுவலா் மற்றும் ஆயுதமேந்திய காவலா் ஆகியோா் இருப்பா். மேலும், சம்பந்தப்பட்ட தொகுதியில் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் முகவா்களும் உடனிருந்து கண்காணிக்கலாம். தற்போது வாக்களிக்க முடியாதவா்களுக்கு இரண்டாவது வாய்ப்பாக வரும் 8- ஆம் தேதியன்று குழுவினா் அவா்களது முகவரிக்கு மீண்டும் சென்று வாக்கு சேகரிக்கும் பணியை மேற்கொள்வா்.

எனவே, ஈரோடு மக்களவைத் தொகுதிக்குள்பட்ட தபால் மூலமாக வாக்களிக்க விருப்பம் தெரிவித்த 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்தி தங்களது வாக்கை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com