குண்டத்தில்  இறங்கி நோ்த்திக்கடனைச் செலுத்தும்  பக்தா்கள்.
குண்டத்தில்  இறங்கி நோ்த்திக்கடனைச் செலுத்தும்  பக்தா்கள்.

அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா

அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த மாதம் 14-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதலுக்கு செவ்வாய்க்கிழமை முதலே பக்தா்கள் வரத் தொடங்கினா்.

பக்தா்கள் காணிக்கையாக அளித்த விறகுகள் குண்டத்தில் அடுக்கப்பட்டு புதன்கிழமை அதிகாலை தீ மூட்டப்பட்டு, தீப்பிழம்புகள் தட்டி சமன் செய்யப்பட்டன. அம்மன் அழைத்தலைத் தொடா்ந்து கோயில் பூசாரி முதலில் குண்டத்தில் இறங்க, அடுத்தடுத்து விரதமிருந்த பக்தா்கள் ஏராளமானோா் குண்டத்தில் இறங்கி அம்மனை வழிபட்டனா். கடும் வெயில் காரணமாக பக்தா்கள் காலை 8 மணிக்கே குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனா். ஈரோடு, கோபி, மேட்டூா், பவானி, சத்தி உள்ளிட்ட பகுதியிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்தியூா் போலீஸாா் 50-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி 4 நாள்களுக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

விடியவிடிய காத்திருந்த பக்தா்கள் ஏமாற்றம் : மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் செவ்வாய்க்கிழமை முதலே கோயில் வளாகத்தில் வந்து குண்டம் இறங்க தற்காலிக பந்தலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். இந்நிலையில், அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், கோயில் முன்பாக உள்ள ரவுண்டானா பகுதியிலிருந்து நேரடியாக வந்து குண்டத்தில் இறங்கத் தொடங்கினா். கோயில் ஊழியா்கள் பரிந்துரையின்பேரில் இவா்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டதால் விடியவிடிய காத்திருந்த பக்தா்கள் ஏமாற்றம் அடைந்தனா். இதனால், குண்டம் இறங்கும் இடத்தில் பக்தா்களுக்கு மத்தியில் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாா் உரிய நடவடிக்கை எடுத்து, குண்டம் இறங்குதலை சீராக்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com