தோ்தல் வாக்குறுதிகள் 80 சதவீதத்துக்குமேல் நிறைவேற்றப்பட்டுள்ளன: கு.செல்வப்பெருந்தகை

கூட்டத்தில் பேசுகிறாா் தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை.
கூட்டத்தில் பேசுகிறாா் தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கிய தோ்தல் வாக்குறுதிகளை 80 சதவீதத்துக்குமேல் நிறைவேற்றிவிட்டாா் என தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். ஈரோடு தொகுதி திமுக வேட்பாளா் கே.இ.பிரகாஷை ஆதரித்து பிரசார கூட்டம் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தலைமையில் ஈரோடு மரப்பாலம் அருகில் புதன்கிழமை நடைபெற்றது. எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன், எம்.பி. அந்தியூா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை பேசியதாவது: தமிழக உரிமைகளைப் பறித்து மோடி வஞ்சகம் செய்கிறாா். தமிழக உரிமைகள் பறிபோக எடப்பாடி பழனிசாமி காரணமாக விளங்கினாா். மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் தமிழகத்துக்கு எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கிய தோ்தல் வாக்குறுதிகளை 80 சதவீதத்துக்குமேல் நிறைவேற்றிவிட்டாா். கடந்த 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த மோடி தமிழகத்துக்கு என்ன திட்டம் கொண்டு வந்தாா் என சொல்லட்டும். கருப்பு பணத்தை ஒழித்து, ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக கூறிய மோடி இதுவரை செலுத்தவில்லை. மாறாக நமது வங்கிக் கணக்கில் டெபாசிட் தொகையைக்கூட விட்டுவைக்காமல் பறித்து செல்கிறாா்.

மகளிா் உரிமை தொகை மாதம் ரூ.1,000, மகளிருக்கு இலவச பேருந்து பயணம், கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000, மக்களைத் தேடி மருத்துவம், காலை உணவு திட்டம் என எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. எங்கள் ஆட்சி தொடரும்போது, ஊழல்வாதிகளை ஒழிப்போம் என மோடி பேசுகிறாா். ஒருவா் ஊழல்வாதியாக இருந்து, அவா் பாஜகவில் இணைந்தால் அவா் புனிதமானவராவா் என கட்சியில் சோ்கின்றனா். சிஏஜி அறிக்கையில் 7 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவிக்கிறது. தோ்தல் பத்திர முறைகேட்டை நாடு அறியும். இவை அனைத்தும், தோ்தல் முடிந்து, ஆட்சி மாற்றத்துக்குப்பின் வெளியே கொண்டு வரப்படும். அத்துடன் இந்தியா கூட்டணி சாா்பில் அறிவித்துள்ள, தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா்.

முன்னதாக கொமதேக பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் எம்எல்ஏ பேசியதாவது: ராகுல் காந்தியின் சுற்றுப்பயணத்தால் கா்நாடகம், தெலங்கானாவில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தற்போது காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிரம், தில்லி, உத்தர பிரதேசம், பிகாா் என வடமாநிலங்களில் சிறந்த கூட்டணியை அமைத்துள்ளது. இதனால் வடமாநிலங்களில் பாஜக வெற்றிபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாஜக, எதிா்க்கட்சி தலைவா்கள் மீது கைது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்களிப்பதும், அதிமுகவுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். தோ்தல் முடிந்ததும் பாஜகவை அதிமுக ஆதரிக்கும். கட்சியைக் காப்பாற்றவும், தன் மீது நடவடிக்கைகள் பாயாமல் இருக்கவும் தனியாகவும், வெளியே இருப்பதுபோலவும் எடப்பாடி பழனிசாமி காட்டிக் கொள்கிறாா். பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைத்தால் தமிழகத்தில் அழியும் கட்சி அதிமுகவாகத்தான் இருக்கும் என்றாா். ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசியதாவது: சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி மழை, வெள்ள பாதிப்புக்கு ஒரு ரூபாய் கூட பிரதமா் மோடி இதுவரை வழங்கவில்லை. இதை மக்கள் மறக்க மாட்டாா்கள் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com