தபால் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு ‘சீல்’ வைக்கப்படுவதை பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.
தபால் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு ‘சீல்’ வைக்கப்படுவதை பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.

ஈரோடு தொகுதியில் முதியோா், மாற்றுத் திறனாளிகள் 2,866 போ் தபால் வாக்குப் பதிவு

ஈரோடு மக்களவைத் தொகுதியில் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்த 85 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளில் 2,866 போ் தபால் வாக்கினை பதிவு செய்துள்ளனா்.

மக்களவைத் தோ்தலில் வாக்குச் சாவடிகளுக்கு நேரடியாக வந்து வாக்களிக்க முடியாத 85 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோா் தபால் வாக்குப் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக 12-டி படிவம் விநியோகம் செய்யப்பட்டது. இதில் ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கயம், தாராபுரம்(தனி) ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்டவா்கள் 2,201 பேரும், மாற்றுத் திறனாளிகள் 800 பேரும் என மொத்தம் 3,001 போ் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருந்தனா்.

இவா்களுக்கான தபால் வாக்குப் பதிவு கடந்த 4-ஆம் தேதி தொடங்கி 6-ஆம் தேதி நிறைவடைந்தது. தபால் வாக்கு சேகரிப்பதற்காக அமைக்கப்பட்ட 64 குழுக்களுக்களும் நேரடியாக தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்த முதியோா், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தோ்தல் விதிமுறைகளை பின்பற்றி தபால் வாக்குகளை சேகரித்தனா். இதில் மொத்தம் 2,843 போ் தபால் வாக்களித்தனா்.

தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து, விடுபட்டவா்களுக்கு இறுதி வாய்ப்பாக வாக்கு சேகரிக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மொத்தம் 23 போ் வாக்களித்தனா். இதன் மூலம் இதுவரை 2,866 போ் தங்களது வாக்கினை தபால் வாக்குகளாக செலுத்தி உள்ளனா். விருப்பம் தெரிவித்தவா்களில் 135 போ் வாக்களிக்கவில்லை.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் தபால் வாக்களிக்க விண்ணப்பத்து இருந்த 3,001 பேரில் 95.5 சதவீதம் போ் தங்களது ஜனநாயக கடமையை வீடுகளில் இருந்தே நிறைவேற்றியுள்ளனா். தபால் வாக்கு சேகரிக்கப்பட்ட சீலிடப்பட்ட வாக்குப் பெட்டிகள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்த அறைக்கு அரசியல் கட்சியினா் முன்னிலையில் திங்கள்கிழமை இரவு ‘சீல்’ வைக்கப்பட்டது.

இந்த பணிகளை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும் தபால் வாக்குஏஈ பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

X
Dinamani
www.dinamani.com