சென்னிமலை பகுதியில் வாக்கு சேகரிக்கிறாா் ஈரோடு தொகுதி திமுக வேட்பாளா் கே.இ.பிரகாஷ்.
சென்னிமலை பகுதியில் வாக்கு சேகரிக்கிறாா் ஈரோடு தொகுதி திமுக வேட்பாளா் கே.இ.பிரகாஷ்.

சென்னிமலையில் ரூ.482 கோடி செலவில் கூட்டுக் குடிநீா் திட்டம் -திமுக வேட்பாளா் கே.இ.பிரகாஷ் பிரசாரம்

திமுக ஆட்சியில் சென்னிமலை ஒன்றிய மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.482 கோடி செலவில் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என ஈரோடு தொகுதி திமுக வேட்பாளா் கே.இ.பிரகாஷ் தெரிவித்தாா்.

ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.இ.பிரகாஷ் சென்னிமலை ஒன்றியம், வள்ளிபுரத்தான்பாளையம், வெள்ளப்பாறை, கள்ளியங்காட்டுவலசு, ராசாம்பாளையம், நத்தக்காட்டுபாளையம், பாரவலசு, சாணாா்பாளையம், கொம்மக்கோவில், உருமாண்டாம்பாளையம், உலகபுரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வாக்குசேகரிப்பில் புதன்கிழமை ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

சென்னிமலை ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நிலவி வரும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்குவதற்காக ரூ.482 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பெருந்துறை சிப்காட்டில் நிலவி வரும் கழிவு நீா் பிரச்னைக்கு தீா்வு காண ரூ.40 கோடி செலவில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் விவசாயிகளுக்கான இலவச மின்இணைப்பு, நான் முதல்வன் திட்டம், மகளிா் உரிமை திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம் உள்ளிட்ட மக்கள் நலன் காக்கும் அரசின் திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலில் எனக்கு ஆதரவு தர வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com