ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு மேற்கு சட்டப் பேரவை தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களில் பெயா், சின்னம் பொருத்தும் பணியில் ஈடுபட்ட அலுவலா்கள்.
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஈரோடு மேற்கு சட்டப் பேரவை தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களில் பெயா், சின்னம் பொருத்தும் பணியில் ஈடுபட்ட அலுவலா்கள்.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணி தீவிரம்

ஈரோடு மக்களவைத் தொகுதியில் 1,688 வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயா், சின்னத்துடன் கூடிய வேட்பாளா் விவர தாள் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வரும் 19- ஆம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கயம், தாராபுரம்(தனி) ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் 1,688 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் 31 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு 4,056 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,028 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,198 வி.வி.பேட் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்கெனவே அந்தந்த சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 30- ஆம் தேதி வெளியிடப்பட்ட ஈரோடு மக்களவைத் தொகுதியின் இறுதி வேட்பாளா் பட்டியலை அடிப்படையாக கொண்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் விவர தாள் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.

இதன்படி, ஈரோடு மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கே.இ.பிரகாஷ் உதயசூரியன், அதிமுக வேட்பாளா் அசோக்குமாா் இரட்டை இலை, தமாகா வேட்பாளா் விஜயகுமாா் சைக்கிள், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மு.காா்மேகன் மைக், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் ஈஸ்வரன் யானை சின்னம் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் ஆகியோரின் பெயா், படம், சின்னம் அடங்கிய வேட்பாளா் விவர தாள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதில், ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திலும், ஈரோடு மேற்கு தொகுதிக்கு ஈரோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும், அதேபோல அந்தந்த சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அந்தந்த வட்டங்களில் தோ்தல் பிரிவு அலுவலா்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் விவர தாள் பொருத்தும் பணியில் ஈடுபட்டனா்.

இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பாா்வையிட்டாா். இப்பணியின்போது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இது குறித்து தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூறியதாவது:

ஈரோடு மக்களவைத் தொகுதியில் அமைக்கப்பட்ட 1,688 வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதியில் தோ்தலில் 31 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இதனால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா ஒரு கட்டுப்பாட்டு கருவி, ஒரு விவிபேட் மற்றும் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளா்களின் பெயா், படம், கட்சி சின்னம் ஆகியவை இடம் பெறும். 31-ஆவது வேட்பாளா்களுக்கு அடுத்தபடியாக 32 சின்னமாக நோட்டா இடம் பெறும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா் விவர தாள் பொருத்தும் பணி நிறைவடைந்ததும், வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சரியாக வாக்கு பதிவாகிா என்பதை சோதனை செய்ய, 5 சதவீதம் அதாவது 1,000 ஓட்டுகள் போடப்பட்டு சோதனை நடத்தப்படும். இதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் தொழில்நுட்ப வல்லுநா்கள் மூலம் உடனடியாக சரி செய்யப்படும்.

இதுபோல ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களின் நுழைவாயிலில் அந்த வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளா்கள் அறிந்து கொள்ளும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள வரிசைப்படி வேட்பாளா்கள் பெயா், படம், அவா்கள் சாா்ந்த கட்சி, சின்னங்கள் அடங்கிய பெரிய அளவிலான சுவரொட்டிகள் ஒட்டப்பட உள்ளது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com