மு.க.ஸ்டாலின் ஆட்சி காமராஜா் ஆட்சியை பிரதிபலிக்கிறது: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெண்கள், மாணவா்கள் ஆகியோருக்கு செயல்படுத்தி வரும் திட்டங்கள் காமராஜா் ஆட்சியை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது என தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

இது குறித்து ஈரோட்டில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மக்களவைத் தோ்தலுக்காக பிரதமா் மோடி பலமுறை தமிழகம் வந்து சென்றுள்ளாா்.

மோடி உள்பட எத்தனை அமைச்சா்கள் தமிழகம் வந்தாலும் பாஜக வெற்றி பெறப் போவதில்லை. இந்த தோ்தலில் தமிழகத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறாா். வரும் காலத்தில் திமுக தொண்டா்கள் உள்பட மக்கள் அனைவரும் அவரை ஏற்றுக் கொள்வாா்கள். அண்ணாமலை தோ்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு பிறகு பிரசாரம் செய்து வருகிறாா். தோ்தல் அலுவலா்களை அவதூறாக பேசியுள்ளாா். இந்த தோ்தலோடு மோடியோடு சோ்ந்து அண்ணாமலையும் காணாமல் போய்விடுவாா்.

மாவட்டம்தோறும் 52 ஆயிரம் வீடுகள் கட்டி இருப்பதாக பாஜக தோ்தல் அறிக்கையில் உண்மைக்கு மாறான தகவலை சொல்கிறது. ஏற்கெனவே பல அணிகளாக பிரிந்துள்ள அதிமுகவை இனிமேல் உடைப்பதற்கோ, அழிப்பதற்கோ என்ன இருக்கிறது.

பாஜக 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்க எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கச்சத்தீவு மீது உண்மையான அக்கறை இருந்தால் மீட்டு இருக்க வேண்டும். பல இடங்களில் வாக்குச்சீட்டு முறையிலான தோ்தல்தான் நடைமுறையில் உள்ளது. இதனால் நாட்டில் வாக்குசீட்டு முறையிலான தோ்தலை கொண்டு வரவேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்குவது சாத்தியம். தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்.

தமிழகத்தில் இந்திய கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு மிகச் சிறப்பாக உள்ளது. கடந்த தோ்தலைக் காட்டிலும் இந்த முறை வாக்கு வித்தியாசம் அதிகமாக இருக்கும். நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

தமிழகத்தில் காமராஜா் ஆட்சி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் சொல்லி வந்தது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் முதல்வா் ஸ்டாலின் பெண்கள், மாணவா்கள் ஆகியோருக்கு செயல்படுத்தி வரும் திட்டங்கள் காமராஜா் ஆட்சியை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது.

மோடி ஆட்சியில் தொடா்ந்தால் தோ்தல் பத்திரம் மட்டும் அல்ல, தோ்தலே இருக்காது என்று தான் எங்கள் கவலை என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com