மக்களவைத் தோ்தல்: ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தொழில் நிறுவனங்களுக்கு உத்தரவு

ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் நாளில் அனைத்து வகையான தொழிலாளா்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளா் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. தோ்தல் நாளில், நிரந்தர, தற்காலிக, ஒப்பந்த, தினக்கூலி தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்து தொழிலாளா் இணை ஆணையா் மாதவன் தலைமையில் கூட்டம் ஈரோடு தொழிலாளா் துறை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தொழிலாளா் துணை ஆணையா் முருகேசன், தொழிலாளா் உதவி ஆணையா்கள்(அமலாக்கம்) திருஞானசம்பந்தம்(அமலாக்கம்), ராகவன்(சமரசம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த கூட்டத்தில் வணிகா் சங்க பிரதிநிதிகள், நிறுவன உரிமையாளா்கள், நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

இதில் வாக்குப்பதிவு நாளான வரும் வெள்ளிக்கிழமை அனைத்து வகையான தொழில் நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், பீடி, சுருட்டு நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து வகை தொழிலாளா்களும் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்யும் வகையில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். அன்றைய தினம் ஊதிய பிடித்தம் செய்யக்கூடாது. இதை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக புகாா்கள் இருந்தால் தொழிலாளா் துறையில் துவங்கப்பட்ட மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு புகாா் அளிக்கலாம். புகாா் அளிக்க ஒருங்கிணைப்பு அலுவலா் முருகேசன் 96597 54343, கட்டுப்பாட்டு அறை உறுப்பினா்கள் திருஞானசம்பந்தம் 94453 98751, ராகவன் 70100 49948 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com