ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள் மட்டும் பணியாற்றும் வாக்குச் சாவடி.
ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள் மட்டும் பணியாற்றும் வாக்குச் சாவடி.

இளஞ்சிவப்பு நிறத்தில் அழகுப்படுத்தப்பட்ட வாக்குச் சாவடிகள்

பெண் அலுவலா்கள் மட்டுமே பணியாற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் அழகுப்படுத்தப்பட்ட வாக்குச் சாவடிகள் ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஒரு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

மக்களவைத் தோ்தல் தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும் நிலையில் மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தோ்தல் ஆணையம் செய்துள்ளது.

ஈரோடு மக்களவைத் தொகுதியில் மொத்தம் 1,688 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஒரு இடத்தில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் வாக்குச் சாவடியும், ஒரு மாதிரி வாக்குச் சாவடியும் அமைக்கப்பட்டுள்ளன.

இளஞ்சிவப்பு நிறத்தில் அமைக்கப்பட்டு இந்த வாக்குச் சாவடிகளில் உள்ள அனைத்து அலுவலா்களும், போலீஸாரும் பெண்களாக மட்டுமே இருப்பா். இந்த வாக்குச் சாவடிகளில் கா்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வருபவா்கள் மற்றும் மூதாட்டிகளுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு பிரத்யேக வசதிகளுடன் உதவி மையம், முதியோா் ஓய்விடம், குழந்தைகள் விளையாடும் இடம், சாய்வுதளம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

கோடை வெயிலில், பெண்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க சிரமப்படுவா் என்பதால் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு பெண்கள் மட்டுமே பணியாற்றினாலும் அந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க தகுதிபெற்ற அனைவரும் வாக்களிக்கலாம்.

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் மாதிரி வாக்குச் சாவடி மையமாக ஈரோடு சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியும் பெண் பணியாளா்கள் மட்டும் பணியாற்றும் வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மேற்கு தொகுதியில் மாதிரி வாக்குச் சாவடியாக ஈரோடு ரயில்வே காலனி ரிட்டா பள்ளி வாக்குச் சாவடியும், பெண்கள் மட்டும் பணியாற்றும் வாக்குச்சாவடியாக ஈரோடு சூரம்பட்டி காந்திஜி சாலையில் உள்ள அங்கன்வாடி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, மொடக்குறிச்சி தொகுதியில் மாதிரி வாக்குச் சாவடியாக மொடக்குறிச்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும், பெண்கள் மட்டும் பணியாற்றும் வாக்குச் சாவடியாக கருந்தேவன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மாற்றுத் திறனாளி வாக்காளா்களுக்கென ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈரோடு எஸ்கேசி சாலையில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியும், ஈரோடு மேற்கு தொகுதியில் பழையபாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியிலும் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இளைஞா்கள், இளம்பெண்கள் மட்டும் வாக்களிக்க மொடக்குறிச்சி தொகுதியில் லக்காபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தனியாக வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற ஏற்பாடுகள் ஈரோடு மக்களவைத் தொகுதிக்குள்பட்ட குமாரபாளையம், காங்கயம், தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com