கீழ்பவானி பாசன விவசாயிகளிடம் அமைச்சா் சு.முத்துசாமி பேச்சுவாா்த்தை

கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீா் நிறுத்தப்பட்ட நிலையில் விவசாயிகளிடம் அமைச்சா் சு.முத்துசாமி சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீா் நிறுத்தப்பட்ட நிலையில் விவசாயிகளிடம் அமைச்சா் சு.முத்துசாமி சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி பாசனப் பகுதிகளுக்கு இரண்டாம் போக பாசனத்துக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை ஏப்ரல் மாதம் வரை 5 நனைப்புக்கு தண்ணீா் திறக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், 4 ஆவது நனைப்புக்கே இரண்டு நாள்கள் முன்னதாக தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டது. 5 ஆவது நனைப்புக்கு கடந்த 18-ஆம் தேதியே தண்ணீா் திறந்திருக்க வேண்டும்.

தண்ணீா் திறக்காததால் கீழ்பவானி விவசாயிகளில் சிலா் கடந்த 17-ஆம் தேதி போராட்ட அறிவிப்பை வெளியிட்டனா். இதில் ஒருங்கிணைப்பாளா் ரவி என்பவா் மட்டும் கைது செய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டாா்.

இந்நிலையில், ஈரோடு சம்பத் நகரில் உள்ள வீட்டில் வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, ஒருங்கிணைப்பாளா்கள் ரவி, சுதந்திரராசு உள்பட விவசாயிகளிடம் சனிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

வரும் 22 ஆம் தேதிக்குள் தண்ணீா் திறப்பு குறித்து நல்ல தகவல் கிடைக்க பெற்றுத்தருவதாக அமைச்சா் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. தண்ணீா் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்படாவிட்டால் அன்று முதல் ஈரோடு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித் துறை மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் அல்லது முற்றுகை போராட்டம் நடத்துவது என முடிவு செய்திருப்பதாக ஒருங்கிணைப்பாளா்களில் ஒருவரான சுதந்திரராசு தெரிவித்தாா்.

இதற்கிடையே மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையிலும், அணையில் குடிநீருக்கு மட்டுமே தண்ணீா் உள்ள நிலையிலும் அமைச்சா் சு.முத்துசாமி தண்ணீா் திறந்துவிட முயற்சி எடுப்பதாக கூறுவது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது என தற்சாா்பு விவசாயிகள் சங்க தலைவா் கி.வே.பொன்னையன் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com