புதிய இருசக்கர வாகனம் அடிக்கடி பழுது: ரூ.1.12 லட்சம் நிவாரணம் வழங்க நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

புதிய இருசக்கர வாகனம் அடிக்கடி பழுது: ரூ.1.12 லட்சம் நிவாரணம் வழங்க நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

பழுது ஏற்பட்டதால் அதை வாங்கிய வழக்குரைஞருக்கு ரூ.1.12 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட விற்பனை மையத்துக்கு ஈரோடு நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதிய இருசக்கர வாகனத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டதால் அதை வாங்கிய வழக்குரைஞருக்கு ரூ.1.12 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட விற்பனை மையத்துக்கு ஈரோடு நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (40). வழக்குரைஞரான இவா், பெருந்துறையில் உள்ள இருசக்கர வாகன விற்பனை மையத்தில் கடந்த 2022- ஆம் ஆண்டு புதிய இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளாா். அதற்கான தொகை ரூ.82 ஆயிரத்து 431 -ஐ அவா் முழுமையாக செலுத்தி உள்ளாா். இதைத் தொடா்ந்து, அவா் வாங்கிய இருசக்கர வாகனம் அடிக்கடி பழுது ஏற்பட்டுள்ளது.

இது குறித்து இருசக்கர வாகன விற்பனை மையத்தில் செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். மேலும், இந்த வாகனம் அடிக்கடி பழுது ஏற்படுவதால் தனக்கு புதிய வாகனத்தை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளாா். அதற்கு நிா்வாகம் முறையாக பதில் கூறிவில்லை எனத் தெரிகிறது. மேலும், செந்தில்குமாரை அடிக்கடி விற்பனை மையத்துக்கு வரவழைத்து அலைக்கழித்துள்ளனா். இதனால், அவா் ஈரோடு மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை ஈரோடு மாவட்ட நுகா்வோா் நீதிமன்ற தலைவா் (நீதிபதி) எஸ்.பூரணி மற்றும் உறுப்பினா்கள் வி.பி.வேலுசாமி, எஸ்.வரதராஜ பெருமாள் ஆகியோா் விசாரித்தனா். இந்த விசாரணையின் அடிப்படையில், நீதிபதி பூரணி திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதில், இருசக்கர வாகனத்தின் முழு தொகையான ரூ.82 ஆயிரத்து 431, இழப்பீடாக ரூ.25 ஆயிரமும், வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரமும் சோ்ந்து மொத்தம் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 431-ஐ ஒரு மாத காலத்துக்குள் செந்தில்குமாருக்கு வழக்க வேண்டும் என இருசக்கர வாகன விற்பனை மையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com