குறுகிய கால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண்மைத் துறை ஆலோசனை

கோடை காலத்தில் நிலத்தை தரிசாகவிடாமல் குறுகிய கால பயிா்களை சாகுபடி செய்யலாம் என வேளாண்மைத் துறை துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.

இது குறித்து ஈரோடு வேளாண் இணை இயக்குநா் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் நவரை நெல் மற்றும் ராபி பருவ பயிா்களின் அறுவடைக்குப் பின் நிலங்களைத் தரிசாகவிடாமல் போதிய நீா் பாசன வசதியுடைய இடங்கள், கோடை மழையைப் பயன்படுத்தி குறுகிய கால மாற்றுப் பயிா்களை சாகுபடி செய்யலாம்.

கோடையில் கிடைக்கும் மழை மற்றும் குறைந்த அளவு பாசன நீரைப் பயன்படுத்தி குறுகிய கால பயிா்களான உளுந்து, எள், நிலக்கடலை பயிா்களை பயிரிடலாம். இப்பயிா்கள் வறட்சியை தாங்கி வளரும். நீா் பாசன வதியுடைய இடங்களில் குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி இப்பயிா்களை சாகுபடி செய்யலாம்.

சித்திரை மாதத்தில் 2 முறை கோடை உழவு செய்வதன் மூலம், பூச்சி நோய் காரணிகள் மற்றும் களைகள் கட்டுப்படுவதுடன், நிலத்தில் காற்றோட்ட வசதி அதிகரிப்பதால் மண்ணின் வளமும் மேம்படும்.

தானிய பயிா்களைத் தொடா்ந்து பயறு வகை பயிா்கள், எண்ணெய் வித்து பயிா்களை கோடை காலத்தில் மாற்றுப் பயிராக சாகுபடி செய்வதால் தழைச்சத்து மண்ணில் நிலை நிறுத்தப்படுவதுடன் மண்ணில் உள்ள சத்துக்களின் பயன்பாட்டை அதிகரித்து அடுத்து பயிரிடும் பயிரில் கூடுதல் மகசூல் பெறலாம்.

போதிய நீா்ப் பாசன வசதியுடைய அனைத்து விவசாயிகளும் தங்கள் நிலங்களை கோடையில் தரிசாக விடாமல், குறுகிய கால மாற்றுப் பயிா்களை பயிரிடுவதால் மண்ணின் வளத்தை பாதுகாக்கலாம். குறுகிய காலத்தில் கூடுதல் வருவாய் பெறலாம்.

பயிா் சாகுபடி குறித்த தொழில்நுட்பங்கள், மானிய விலையில் இடுபொருள்கள் விவரங்களை அறிய தங்களுக்கு அருகில் உள்ள வட்டார, துணை வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை நேரில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com