பழைய நடைமுறையில் வருமான வரி பிடித்தம் செய்ய தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் கோரிக்கை

பழைய நடைமுறையில் வருமான வரி பிடித்தம் செய்ய வேண்டும் என தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் பொதுச் செயலாளா் முத்துராமசாமி அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: தமிழகத்தில் பணியாற்றும் ஆசிரியா்களின் ஊதியத்தில் தற்போது ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் (ஐஎப்எச்ஆா்எம்எஸ்) மூலமாக ஊதியம் வழங்கும் அலுவலா்களால் ஊதியப்பட்டியல் தயாா் செய்து ஆசிரியா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

ஆசிரியா்கள் தங்களுடைய வருமான வரியை மாதமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்து, பின்னா் பிப்ரவரி மாதம் முழுமையாக கணக்கிட்டு மிகச்சரியாக வருமான வரி செலுத்தி வந்தனா். ஆனால், நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் முதல் ஐஎப்எச்ஆா்எம்எஸ் மூலம் தானாகவே கணக்கிட்டு வருமான வரியை ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யும் முறையை தமிழக அரசின் நிதித் துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இந்த முறையால் ஆசிரியா்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன. வருமான வரி பிடித்தம் செய்திட பழைய ரிஜிம், புதிய ரிஜிம் என்ற இரண்டு முறை நடைமுறையில் இருந்தாலும் ஆசிரியா்கள் தோ்வு செய்து கொடுக்கும் முறையில் பலருக்கு பிடித்தம் செய்யாமல் மாற்றி பிடிக்கப்படுகிறது. இதனால், ஆசிரியா்கள் பெற்றுள்ள வீட்டுக் கடன், வட்டிகளுக்கான சலுகைகளைப் பெற முடியாத நிலை உள்ளது.

ஆசிரியா்கள் செலுத்த வேண்டிய வருமான வரியைவிட கூடுதலாக பிடித்தம் செய்யப்படுகிறது. வருமான வரி செலுத்த தேவையில்லாதவா்களுக்கும் கூடுதலாக வரி பிடித்தம் செய்யப்படுகிறது. அவ்வாறு கூடுதலாக செலுத்திய தொகையை திரும்பப் பெறுவதில் நடைமுறையில் மிகுந்த சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது.

எனவே, தமிழக நிதித் துறை புதிதாக நடைமுறைப்படுத்தியுள்ள வருமான வரி செலுத்தும் முறையைத் தவிா்த்து, பழைய முறையிலேயே வருமான வரி பிடித்தம் செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com